
இந்தியாவின் முதன்மையான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் ஜி.பி. பிர்லா காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 86.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷிவ் நாராயண் பிர்லா 1857இல் பிர்லா தொழில் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது.
பிர்லா தொழில் நிறுவனத்தை ஜி.பி.- சி.கே. பிர்லா குரூப் என்று மாற்றி நவீனப்படுத்தியவர் பிரஜ் மோகன் பிர்லா. இவரது மகன் ஜி.பி.பிர்லா. இவர் கார் உதிரிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், மின் சாதனங்கள் என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஓரியண்ட் பேன்ஸ் நிறுவனங்களுக்குத் தலைவராக இருந்தார்.
இதனால் பிர்லா நிறுவனம் இந்தியாவின் நம்பர்-1 தொழில் நிறுவனமாக மாறியது. அதோடு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பிர்லா குழுமம் பங்குதாரராக இருந்து வருகிறது.
வயதாகி விட்டதால் ஜி.பி.பிர்லா தன் தொழில் பணிகள் அனைத்தையும் மகன் சி.கே.பிர்லாவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார். கொல்கத்தாவில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
நேற்றிரவு அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று கொல்கத்தாவில் நடக்கிறது