உங்கள் ஈ-மெயிலை இணைக்க
செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் ததேகூ - முகா பாரிய வெற்றி : சம்பந்தன் - ஹக்கீம்

[2-Feb-2010]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளன. மக்கள் வாக்களித்ததன் மூலமாக உண்மையான பிரதிநிதியையும் விசுவாசமான பிரதிநிதியையும் தேர்தலின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இதன் உண்மையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தெரிவித்துள்ளன.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சகல இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் ஒற்றுமைக்கு பதிலாக பிரிவினைக்கான பிரகாரமே முன்னெடுக்கப்பட்டது. இது துரதிஷ்டவசமானது. கவலைக்குரியது மட்டுமன்றி அதற்காக நாம் மனவருத்தமடைகின்றோம் என்றும் அவை தெரிவித்துள்ளன.

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் எம்.பி. தலைமையில் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், பைசல் காசிம் எம்.பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு சம்பந்தன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

\"இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், விசேடமாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் பல பிரச்சினைக்கு மத்தியில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் நாம் கூறியமைக்கு இணங்க வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய ஆணையை நீடிப்பதற்கு அவருக்கு வாக்களிக்காமல் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. மக்கள் வாக்களித்தன் மூலமாக உண்மையான பிரதிநிதியையும் விசுவாசமான பிரதிநிதியையும் தேர்தலின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளனர். இதன் உண்மையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிரணியின் பொது வேட்பாளருக்கு வாக்களித்தன் மூலமாக அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் கெபினட் அமைச்சர்கள் ஆகியோரை மக்கள் நிராகரித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தி, முன்னெடுக்க வேண்டிய சகல முயற்சிகளையும் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதன் பின்னர், அரசாங்க தரப்பிலிருந்து வடக்கு கிழக்கு பிரதேசங்களைத் தவிர்ந்த சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் துவேஷமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இரு வேட்பாளர்களிடமும் ஒரே விதமான பேச்சுவார்த்தை

கூட்டமைப்புக்கும் ஜெனரலுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் விஷமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இரு வேட்பாளர்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஜனாதிபதியிடமே முதலில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரே விதமாக, ஒரே விடயத்தை, ஒரே கேள்வியையே இருவரிடமும் கேட்டிருந்தோம். அந்த பேச்சுவார்த்தையில் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை, இருவரிடமும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சகல இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் ஒற்றுமைக்குப் பதிலாக பிரிவினைக்கான பிரசாரமே முன்னெடுக்கப்படுகிறது. இது துரதிஷ்டவசமானது. கவலைக்குரியது. அதனையிட்டு நாம் மனவருத்தமடைகின்றோம்.

சிங்கள மக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் மலையக மக்கள் சகலரும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

வாக்களிப்பு தினத்தன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் காரணமாக அங்கு மக்கள் வாக்களிப்பில் வருகை தந்தமை குறைந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு இலவச போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முறையாக போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படவில்லை.

3000 பேர் வாக்களிக்க இரண்டே பஸ்கள்

வாக்களிப்பு தினத்தன்று மக்கள் காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை வீதியிலேயே நின்றுகொண்டிருந்தனர். சுமார் மூவாயிரம் பேருக்கு இரண்டு பஸ்களே வழங்கப்பட்டிருந்தன. இரண்டு பஸ்களிலும் ஒரு தடவையில் 140 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு நன்கொடைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட எமது கட்சியை சேர்ந்த கனகரட்ணம் எம்.பி.யினால் கூட நன்கொடைகள் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஜனாதிபதியின் இணைப்பாளரால் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிப்புக்குப் பின்னரும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன\" என்றார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,

\"தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு வாக்களித்த கணிசமான சிங்கள மக்களுக்கும் மலையகத்திலும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் மலையகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் அமைச்சர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். தோல்வியை மறைப்பதற்கு ஏவிவிடப்பட்ட குண்டர்களும் அடியாட்களும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

வவுனியா, அம்பாறை மாவட்டங்களில் எமது ஆதரவாளர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்படுகின்றனர். வெற்றியே சந்தேகத்திற்கு இடமான போதிலும் சொந்த தோல்வியை மறைப்பதற்கு பலவேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன . மக்கள் அச்சத்துடனேயே இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஆயுதக் களைவே உண்மையான ஜனநாயகம்

அரசாங்கத்தின் அனுக்கிரகத்தில், அனுசரணையில் செயற்படுகின்ற சட்ட விரோத ஆயுத குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஆயுதங்கள் களையப்படுதலே ஜனநாயகம், சமூக வாழ்வு இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு அத்திவாரமாக அமையும். எனவே ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் நம்பகத்தன்மையை தெளிவாகவே கேள்விக்கு உள்ளாகியுள்ளது. வன்முறைகளின் மூலமாக மேற்கொள்ளப்படும் ஆட்சி செல்லுபடியற்றது என்பதனை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றார்.

எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்