உங்கள் ஈ-மெயிலை இணைக்க
கட்டுரைகள்

அவநம்பிக்கையில் நம்பிக்கை : ராகவன்

[24-Jan-2010]

"ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயகமுறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்கமுடியாது." -  அம்பேத்கர்


ஜனாதிபதி தேர்தல் களை கட்டுகிறது. உலகம் பயந்த, வியந்த பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பை ராணுவரீதியாக ஒட்டுமொத்தமாகத் துடைத்தொழித்த வரலாற்றுப் பெருமை அரசுக்கும் இலங்கை ராணுவத்திற்குமே என கொண்டாடி வந்த மகிந்த அரசு போர் முடிந்து 6 மாதங்களுக்குள் பலத்த நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது.

புலிகளுடனான இறுதி யுத்தகாலப் பகுதியில் வழமைக்கு மாறாக ராணுவத் தளபதிகள் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதும் அரசியல் கருத்துக்கள் கூறுவதும் அனுமதிக்கப்பட்டது. ராணுவவீரர்கள் ரம்போக்களாக நாடு காப்போராக விளிக்கப்பட்டனர்.

சரத் பொன்சேகா நாடு காத்த ஜெனரலாக அரசின் அதியுயர்ந்த விருதினை அடைந்தார். ராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்த வளர்ச்சிப்போக்கில் ராணுவமானது பல்வேறு சலுகைகளை அனுபவித்தது மட்டுமல்ல, அதற்கான ஒரு அரசியல் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டது. யுத்தம் முடிந்தவுடன் ராணுவத் தலைமையின் அரசியல் அதிகாரத்திற்கான அங்கீகாரம் அரசிடமிருந்து முழுமையாகக் கிடைக்காத நிலையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் வடிவே இன்றைய தேர்தல் நிலை. அரசு ராணுவமயமாக்கப்பட்டும் ராணுவம் அரசியல்மயமாக்கப்பட்டும் வந்த இந்த வளர்ச்சிப்போக்கில் வந்த முரண்பாடுகள் இன்று வெடித்து சரத் பொன்சேகாவை பொதுவாக்காளாராகத் தெரிவு செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. யுத்தம் முடியும்வரை தங்களைப் பயன்படுத்தி வெற்றிப் புகழை மகிந்த சகோதரர்கள் தமக்கு மட்டும் சொந்தமாக்குகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ராணுவ வட்டாரங்களில் இருந்து வருவது இயற்கையே. எனவே இந்தப் பிளவானது அடிப்படையில் அதிகாரத்திற்கான போட்டியே.

ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றைய எதிர்க்கட்சிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவை பொதுவாக்காளராக ஜனாதிபதித் தேர்தலில் நியமித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சிக்கான ஜேவிபிக்கான பாரம்பரிய வாக்குகள் அவர்களுக்கே பெரும்பாலும் சேரும். யுத்த வெற்றியால் விழும் வாக்குகள் மகிந்த, சரத் இருவருக்கும் பிரிந்து போகும் வாய்ப்பு இங்கு இருக்கிறது. எனவே சிறுபான்மை இனங்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை ஒன்று உருவாகியிருக்கிறது. இதுவரை காலமும் யுத்தத்தின் பேரால் தெற்கிலங்கை மக்கள் விலைவாசி ஏற்றம், வறுமை போன்றவற்றை சகித்துக்கொண்டனர். யுத்தம் முடிந்தவுடன் தங்களது நாளாந்தப் பிரச்சனைகளை அரசு தீர்க்கவில்லை என அதிருப்திப்படத் தொடங்கியுள்ளார்கள். இந்த நெருக்கடிகள் இன்னும் மோசமாகப் போவதற்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலை அவசர அவசரமாக அரசு நடத்துவதற்குத் தீர்மானித்து தேர்தலுக்கும் நாள் குறித்தது. ராணுவ வெற்றி பற்றிய பேச்சுகள் அடங்கி முகாம்களில் வாழும் மக்கள் பற்றியும், சரணடைந்த புலியுறுப்பினர்களின் கொலை பற்றியும் பத்திரிகை சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் சரத் பொன்சேகாவும் ராஜபக்சவும் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தின்மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றார்களா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. ஆனால் இவற்றைப் பேசுவதற்கான ஒரு குறைந்த பட்ச இடைவெளி ஒன்று ஏற்பட்டிருக்கின்றதென்பது யதார்த்தமே. இந்த இடைவெளியைத் தமது அரசியல் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு எவ்வாறு சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பயன்படுத்தப் போகின்றன என்பதிலேயே சிறுபான்மை இனங்களின் அரசியல் வெற்றி தங்கியிருக்கின்றது. இந்த இடைவெளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய நிலைப்பாடுதான் இங்கு அவசியம்.

எந்த வேட்பாளர் பதவிக்கு வந்து பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை அணுகுவது அர்த்தமற்றதே. இலங்கை இந்தியாவுடன் கிரிக்கட் போட்டி விளையாடும் இச்சமயம் கிரிக்கட்டை வழக்கமாக முதன்மைப்படுத்தும் இலங்கை மக்கள் தேர்தலைப்பற்றி பேசுவதிலேயே அதிக நேரம் செலவு செய்கிறார்கள் என நண்பர் ஒருவர் இலங்கையிலிருந்து தெரிவித்தார். பல்லினங்கள் வாழும் இலங்கையில் கிரிக்கட் அணி போன்று அரசும் அமைந்துவிட்டால் சிறுபான்மை இனங்களின் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வரலாம் என நான் சிலசமயம் யோசிப்பதுண்டு. பல்லின அடையாளங்ளைக் கொண்ட கிரிக்கட் அணி வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அணியில் இருப்பவர்களுடன் இன பாரபட்சமில்லாமல் அவர்களுக்குரிய இடத்தைக் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டதாக இருக்கிறது. அதேவேளை இலங்கையின் அரசியலானது சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க மறுத்து, பெளத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்துக்கொண்டு எல்லா இனங்களும் சமமெனச் சொல்வது என்பது முரளி நல்ல பந்து வீச்சாளர், அவர் அணியில் இருக்கலாம். ஆனால் அவருக்கு ஒரு ஓவர் தான் கொடுக்கலாம் என்பது போலவே. இலங்கை அரசியல் யாப்பும் நடைமுறையும் சிறுபான்மை இன மக்களின் அடிப்படை ஜனநாயக அரசியல் உரிமைகளை மறுப்பதாகவே அமைந்திருக்கிறது. இந்த வேறுபாடுகள் வெளிப்படையாகவும் நுண்ணியமாகவும் ஸ்தாபனமயமாகப்பட்டுள்ளது.

இரண்டாவது குடியரசு உருவாக்கத்தின்பின் ஜனாதிபதிக்கான நிறைவேற்றதிகாரங்கள் குவிந்திருப்பது ஜனநாயகத்தின் பேரில் சர்வாதிகார ஆட்சிக்கான நிகழ்தகவைக் கொண்டிருக்கின்றதெனவும் பலர் அஞ்சுவது ஆச்சரியமல்ல. ஊடக உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரால் நசுக்கப்படுகின்றன. மே 18இற்குப் பின் புலிகளை முற்றுமுழுதாக ராணுவரீதியாக ஒழித்துவிட்டோம் என்று அரசு மார்தட்டும் அதேவேளை, தேசத்தைப் பிரிக்கும் சக்திகள் இன்னும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இயங்கிக் கொண்டிருப்பதாக இதுவரையும் அரசு பூச்சாண்டி காட்டி வந்தது. இன்று மகிந்த அரசுக்கெதிராக பொதுவேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகா பிரிவினை விசக்கிருமிகள் இன்னும் அழியவில்லை, ராணுவ விஸ்தரிப்பு அவசியம் என மே 18இன் பின்பு சொல்லிக்கொண்டிருந்தவர். இன்னொரு புறம் மகிந்த அரசானது இதுவரையும் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கான அரசியல் தீர்வொன்றினை முன்மொழிவதற்கான முயற்சிகள் எதுவும் எடுப்பதாக தெரியவில்லை. அபிவிருத்தி என்ற கோசமே மகிந்த அரசு சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வாக வைக்கப்படுகிறது. மறுபுறம் சம்பிக்க ரணவக்க தமிழரின் ஆதிக்கத்தை 1000 வருடங்களுக்கு முன்னர் நாம் முறியடித்தோம். இன்றும் அதனைச் செய்து காட்டி இருக்கிறோம். தமிழர் திரும்பவும் தம்மை மீள் கட்டமைக்க இன்னும் 2000 வருடமாவது காத்திருக்க வேண்டுமென இனவாதம் பேச, அரசின் பிரதிநிதிகள் கலந்து கூட்டத்தை சிறப்பிக்கிறார்கள். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மையினங்கள் எவ்வாறு எதிர்கொள்வதென்பது கேள்வியாகிறது.

ஜனாதிபதி முறையும் மத்தியத்துவப்பட்ட அரசியல் அமைப்பும் தமிழர், சிங்களவர், மலையக மக்கள், முஸ்லிம்கள், பறங்கியர், வேடர் போன்ற அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான சவாலாக இருப்பது ஒரு புறம். ஆனால் அரசானது இனவாதக் கருத்தியலை தனது அங்கமாக வரித்திருக்கும்போது சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் பெரும்பான்மை இனத்தைவிட அதிகம் பாதிக்கப்படுகின்றதென்பது யதார்த்தமே. சிறுபான்மை இனங்கள் தாங்களும் இலங்கைப் பிரஜைகள் என அடையாளம் கண்டுகொள்வதற்கான உரிமை அரசியல்யாப்பு, நடைமுறை இரண்டாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பின்காலனித்துவ அரச உருவாக்கத்தில் அனைத்து இலங்கை மக்களையும் ஒன்றுபடுத்தும் ஒரு தேசிய அரசியல் கருத்தாக்கம் மிளிரவில்லை. மாறாக, சிங்கள பெளத்த அரசியல் கருத்தியலே இலங்கையின் அரசியலை நிர்ணயம் செய்தது. கருத்தியலானது வெறும் மனரீதியானதல்ல. கருத்தியல் மக்களைப் பற்றிக்கொண்டால் அது நடைமுறையாகிறது. இலங்கை சிங்களவரின் நாடு என்ற எண்ணப்பாடு அரசியல், கலாச்சாரம், பொருளியல் தளங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றமானது ஒரு சமூகமாற்றமாகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றைய சமூகங்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்க முயல்கிறது. அவர்களது அரசியல் உரிமைகளை உதாசீனம் செய்கிறது. எனவே சமூகம் ஜனநாயகமற்ற தன்மைக்குச் செல்கிறது.

பல்லினங்கள் கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மைவாத ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தை மறுக்கும் செயலாகும். பெரும்பான்மைவாத ஜனநாயகமானது மற்றைய இனக்குழுக்களுக்கான அரசியல் பிரதிநிதிதித்துவத்தை மறுக்கிறது. அவர்களை ஓரம் கட்டுகிறது. இந்த ஓரம் கட்டுதலானது மற்றைய இனங்களை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் புறக்கணிக்கிறது. எனவே இது ஜனநாயகப் பண்பை இழந்து விடுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை ஒற்றை ஆட்சி சிங்களப் பெரும்பான்மைவாதக் கருத்தியலால் கட்டப்பட்டிருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. இவரும் சிங்களப் பெரும்பான்மைவாத அரசியலினூடாகவே ஆட்சிக்கு வருகிறார். எனவே அடிப்படையில் அரசியல் அமைப்பானது ஜனநாயகத்தை மீறும் அரசமைப்பே. ஒருவகையில் சிறுபான்மை இன மக்களை ஓரம் கட்டும் இந்த ஜனநாயகமின்மையானது அதன் வளர்ச்சிப் போக்கில் அனைத்து இலங்கை மக்களினதும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் என்பது கடந்த கால நிகழ்வுகளிலிருந்து வெளிப்படை. பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவை போலீஸின் அதிகாரத்தை அளவுக்கதிகமாகக் குவித்து, அதனால் பல சிங்களவர்கள் அற்ப காரணங்களுக்காக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியிருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் பலர் மிரட்டலுக்கும் கொலைக்கும் ஆளாகியிருக்கின்றனர். எனவே இலங்கையர் என்ற வகையில் ஒட்டுமொத்தமான ஜனநாயகப் போராட்டங்களில் அனைத்து மக்களுடன் இணைந்து குரல் கொடுப்பதும் சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் தமது தனித்துவமான அரசியல் உரிமை சம்பந்தமான போராட்டங்களையும் அழுத்தங்களையும் கொடுப்பதும் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இன்றிருக்கும் இரட்டைச் சுமைகளாகும்.

ஆனால் இவ்வகையான அரசியல் சிந்தனை முறையோ, நடைமுறையோ சிறுபான்மை இனங்களின் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 30 வருட யுத்தமும் புலிகளின் சுத்த ராணுவக் கண்ணோட்டமும் ஏகப் பிரதிநிதித்துவச் சிந்தனைமுறையும் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு வெற்றிடத்தைத் தோற்றுவித்தது. புலிகளின் ராணுவ வெற்றிகளைத் தமக்குச் சாதகமாக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கலாய்த்தது. தனது சுயத்தை இழந்து சுயாதீனமாக ஒரு கருத்தைக்கூட கூறுவதற்குக் கூட்டமைப்புக்கு வக்கிருக்கவில்லை. அவர்களுக்குப் புலிகளில் எவ்வித நம்பிக்கையோ அல்லது அபிமானமோ இருக்கவில்லை என்பது இன்று அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து துல்லியமாகத் தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்திலும் மக்களிடத்திலும் புலிகள் பற்றிய பிரமையொன்றை அவர்கள் கட்டிக்கொண்டே இருந்தனர். இதேவேளை புலிகளின் ஜனநாயக மறுப்பாலும், மாற்று இயக்கங்களின் மேலான திட்டமிட்ட தாக்குதலின் காரணமாகவும், அரசிடம் பாதுகாப்பு வாங்கிய மற்றைய அமைப்புகள் பலவும் மகிந்த அரசை புலிகளிடமிருந்து ஜனநாயகத்தை மீட்ட நல்லரசாக புகழ்ந்து மகிந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமாறு குரல் கொடுக்கின்றன. அவர்களுக்கும் மகிந்த அரசு இனப் பிரச்சனைக்கான தீர்வை வழங்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. இதனை தனிப்பட்ட ரீதியில் தெரிவிப்பார்கள். ஆனால் மக்கள் மத்தியில் வெளிப்படையாக இதனைக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை.

சமீபத்தில் ஒரு கட்டுரையில் வந்த உபகதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு விஞ்ஞானி தனது வீட்டு வாசலில் குதிரை லாடனொன்றைத் தொங்கவிட்டிருந்தாராம். குதிரை லாடனை வாசலில் தொங்கவிட்டால் கெட்ட ஆவிகள் கிட்ட வராது என்பது ஐதீகம். அவரது வீட்டுக்கு வந்த இன்னொரு விஞ்ஞானி லாடனைக் கண்டு ஆச்சரியமுற்று, உங்களுக்கும் மூட நம்பிக்கை இருக்கின்றது என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது என்றாராம். உடனே அந்த விஞ்ஞானிக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது. வந்தவரைப் பார்த்து அவர் சொன்னார்: எனக்கும் இதில் நம்பிக்கையில்லை. ஆனால் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது வேலை செய்யும். எனவே நான் அதைத் தொங்கப் போட்டிருக்கிறேன். இந்த விஞ்ஞானியின் நிலையில்தான் சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகள் இன்று இருக்கின்றன. தமிழர் தேசியக் கூட்டணியின் அரசியல் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒத்தோடி அரசியலாகவே இருக்கிறது. விடுதலைப் புலிகள் பலமாயிருந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியாகப் புலிகளை விமர்சனம் செய்யும் அதேவேளை, மக்கள் மத்தியில் புலிகளே நாடு காப்போர். புலிகளை விட்டால் தமிழருக்குக் கதியில்லை என முழக்கம் போட்ட பழக்கத்தால் இன்று காத்திரமான ஒரு முடிவை எடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். மகிந்தவை ஆதரித்தால் தமக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா அல்லது சரத்தை ஆதரித்தால் தம்மை மக்கள் தெரிவு செய்வார்களா என்பதில் இவர்கள் தமது காலத்தை வீணடிக்கிறார்கள்.

இறுதியாக, ஜனவரி நாலாம் திகதி 2010 இல் தமிழ் தேசியக் கூட்டணியினர் சரத் பொன்சேகாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்து அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தனர். சரத் பொன்சேகா கையொப்பமிட்ட அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமானது அடிப்படையில் சிவில் நிர்வாகத்தை சீரமைப்பது, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது, தமிழ் பேசத் தெரிந்த அதிகாரிகளை பொலிசில் நியமிப்பது, அனைத்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவது, இடம் பெயர்ந்தோரைத் துரிதமாக மீள் குடியமர்த்துவது, கண்ணி வெடி அகற்றுவதைத் துரிதப்படுத்துவது, சட்டவிரோதமாகக் காணிகள், வீடுகளில் குடியிருப்போரை அகற்றி சொந்தக்காரரிடம் காணிகளை ஒப்படைத்தல், விவசாயத்தை ஊக்குவிக்க விசேட மானியங்கள், மீன் பிடிப்போர் எதிர்கொள்ளும் தடைகளை முற்றாக நீக்குதல், சகல பொருளாதார, போக்குவரத்து தடைகளை நீக்குதல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் (ராணுவத்தினர் உட்பட) நிவாரணம் வழங்குதல், தடுப்புக்காவலில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்தல், அவர்களுக்கு புனருத்தாரண வசதிகளைச் செய்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல் ஆகிய அம்சம்களைக் கொண்டிருக்கின்றது. அடிப்படை ஜனநாயகத்தை மீள்கட்டமைப்பது அவசியமென்பதும் மேற்கண்ட விடயங்கள் அதற்கொரு உந்துசக்தியாக விளங்குமென்பதும் யதார்த்தமெனினும், ஆச்சரியத்துக்கு உரிய விடயமென்னவென்றால் சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக எதுவும் பேசப்படவில்லை என்பதே.

மறுபுறம் ராஜபக்ச அரசும் முகாம்களைத் திறந்து மக்களை மீள்குடி அமைப்பது, கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித்தடையை முற்றாக நீக்குவது, போக்குவரத்துத் தடைகளை நீக்குவது, யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறது. மேற்கண்ட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலானவையைத் தாங்கள் செய்வதாக மகிந்த அரசும் ஒத்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதென மகிந்த, சரத் இருவரும் ஒத்துக்கொண்டிருக்கும்போது சரத்திற்கான ஆதரவு பற்றிக் கேள்வியெழுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நிபந்தனையுடன் கூடிய ஆதரவு என்று கூறிக்கொண்டாலும் அடிப்படையில் இது நிபந்தனை அற்ற ஆதரவே. யுத்தத்திற்குப் பச்சை கொடி காட்டியவர் மகிந்த. யுத்தத்தை நடத்தியவர் சரத். இதில் இருவரும் யுத்தத்தை முன்னின்று நிகழ்த்தியவர்களே.

இதனைத் தவிர சமீபத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது சம்பந்தமான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும்போது சரத்தை பொது வாக்காளராகத் தேர்ந்தெடுத்த ஐக்கிய தேசியக்கட்சியும் ஜேவிபியும் அமைதி காத்தனர். தேசியக் கூட்டமைப்பு இதுவரையும் மதில் மேல் பூனைகளாக இருந்துவிட்டு, அரசியல் தீர்வெதிலும் உடன்பாட்டிற்கு வராமல், சரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு எனச் சொல்வது அடிப்படையில் நிபந்தனை அற்ற ஆதரவே. மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்தாலோ, சரத்துக்கு ஆதரவு கொடுத்தாலோ இலங்கையின் ஜனநாயக பிரச்சனைகளோ, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனைகளோ தீர்ந்து விடாது என்பதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனாலும் இருவரில் ஒருவருக்குத் தாங்கள் ஆதரவு கொடுத்து லொட்டரி அரசியலுக்குத் தம்மைத் தயாராக்குகிறார்கள். இந்த அவநம்பிக்கை மேலான நம்பிக்கையே இவர்களிடம் இன்றிருக்கும் பிரச்சினை.

சிறுபான்மை இனங்களின் அரசியல் அதிகாரப் பங்கீட்டுக்கான போராட்டமானது இலங்கையில் இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயகச் சூழலுக்குள் முயற்சி செய்து பார்க்கக்கூடியதே. சாத்வீகரீதியான சகல போராட்டங்களும் முடிவுக்கு வந்த பின் ஆயுதம் தூக்கினோம் என்பது அவசரப்பட்ட முடிவே. அதன் அனர்த்தத்தை நாம் அனுபவித்தோம். சகல சாத்வீகரீதியான ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். சீர்திருத்தம் என்பது கேத்தலில் படிந்திருக்கும் கல்சியத்தைச் சுரண்டித் தண்ணீரைத் துரிதமாகக் கொதிக்க வைப்பது போன்றது. தண்ணீரைத் துரிதமாக கொதிக்க வைக்க வேண்டுமெனெ முட்டாள்தனமாக கைக்குண்டொன்றை கேத்தலுக்கடியில் போட்டால் பானையும் உடைந்து தண்ணீரும் பறந்து அருகிலிருப்பவரும் காயமடைய நேருமென்றார் ஆனந் டும்பிள்டே எனும் அரசியல் அறிஞர். அவசரப்பட்டுப் பானையை உடைத்த நிலை இன்று தமிழ் மக்களுக்கு.

தமிழ் மக்களும் மற்றைய சிறு பான்மையின மக்களும் தமது அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு பெரும் புரட்சிகரச் சொல்லாடல்கள் தேவையில்லை. நாடு கடந்த தமிழீழமும் வட்டுக்கோட்டைத் தீர்மானங்களும் இலங்கை அரசின் பயங்கரவாதப் பூச்சாண்டிக்கு இன்னும் உரமேற்றும் செயல்கள். உடைத்த பானை போதாதென்று உருவாகிவரும் பானையையும் உடைக்கக் காத்திருக்கும் செயல்கள். சிறுபான்மையினங்கள் தமது அரசியல் அதிகாரத்திற்கான முன்னெடுப்புகளைச் சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் எடுப்பதென்பது சாத்தியமற்றது. சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டமானது சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற யதார்த்தம் சிங்கள மக்களுக்கு உணர்த்தப்படுவதில்தான் சிறுபான்மை இனங்களின் அரசியல் வெற்றி தங்கியிருக்கிறது. தமிழ்த் தேசியவாத அணுகுமுறை சிங்கள மக்களை மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனங்களையும் அந்நியப்படுத்திவிடும்.

இதுவரைகாலமும் சிங்களத் தேசியவாதத்திற்குப் பதிலாக எழுந்த தமிழ்த் தேசியவாதக் கருத்தியலானது அடிப்படையில் மற்றைய இனங்களைப் புறம்தள்ளுவதாயும் ஜனநாயகமற்றதாயும் உருவகமெடுத்து பேரழிவொன்றை எமக்குத் தந்து விட்டுப் போயிருக்கிறது. தமிழ் அரசியல் அமைப்புக்கள் இந்தத் தேசியவாதச் சிந்தனை முறையிலிருந்து விடுதலை பெற்று புதிய சிந்தனைமுறைகளை நோக்கித் தம்மை நகர்த்துவது அவசியம்.

சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, சுதந்திரக் கட்சிக்கோ நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதைத் தவிர்த்து, சிறுபான்மை இனங்களுக்கான அனைவரும் குறைந்த பட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்மொழியுமாறு வற்புறுத்தி எந்தக் கட்சி அதனை முன்னெடுக்கிறதோ அதற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது ஒரு நிலைப்பாடு. இது ஒரு குறுகிய கால நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிலைப்பாடே அவசியம்.

நீண்டகால நிலைப்பாட்டிற்கான வேலைமுறைகளுக்கு நாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டும். நீண்டகால யுத்தத்தினால் இராணுவமயமாக்கப்பட்ட சமூகமாக இலங்கை உருவாகியிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் ராணுவ சர்வாதிகாரம் தமிழ் மக்களின் ஆன்மாவையே கொன்றுவிட்டது. வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் சீரழிந்து மனிதர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் யார் வருகின்றார் என்பதைவிட, சமூகத்தை ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வரல் அவசியம். தென்னிலங்கை மக்களின் ஜனநாயக உரிமையானது சிறுபான்மை இன மக்களின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமாகவே வென்றெடுக்கப்படமுடியும் என்ற கருத்தியலை சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்னெடுக்கவேண்டும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நீண்டகால விடுதலைப் புலிகளின் பேராதிக்கத்தின் காரணமாக, மக்கள் மத்தியிலிருந்து அந்நிpயப்பட்ட நிலையே தொடர்கிறது. 30 வருடகாலமாக ஒரு புறம் புலியாதரவாகவும், மறுபுறம் புலி எதிர்ப்பாகவும் இருந்த இந்த அமைப்புகள் அடிப்படையில் ஒரே குணாம்சத்தைக் கொண்டிருக்கின்றன.

புலிகளை நிபந்தனையற்று ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டணி தனது ஆன்மாவை இழந்து தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேணத் தவறியதே இன்று அதற்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. அது மட்டுமல்ல, புலிகளின் நிழலில் வாழ்ந்ததால் இவர்கள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அரசின் பாதுகாப்பைத் தேடிய அமைப்புகளும், கடந்த 30 வருடங்களாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன. இன்று இந்நிலை சற்று மாறியிருக்கின்றது. ஆனால் இந்த அமைப்புகள் ஜனநாயகத்தைப் பேசிக்கொள்ளினும் கடந்தகால நிகழ்வுகளால் ராணுவமயமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இவர்கள் தமது இதுவரை கால அரசியலை மீளாய்வு செய்வதும் தமது அமைப்புகளை ஜனநாயகமயப்படுத்துவதும் அவசியமாகிறது. 

ஜனநாயகம் என்பது தேர்தலால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. சமூகக் கலாச்சாரம் ஜனநாயகப் பண்பு கொண்டதாக மாற வேண்டும். சிறுபான்மையினங்களின் கட்சிகள் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைக்கவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்யவும் தம்மைத் தயார்ப்படுத்துவார்களா என்பதிலேயே ஜனநாயகத்துக்கான - சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமை சம்பந்தமான - அரசியல் போராட்டமும் தங்கியிருக்கிறது.

 

"நன்றி : வைகறை"

 

1கருத்துக்கள்
Related Post
[ 06-02-2010 ]

very good articale

Post your Comments
English   பாமினி உச்சரிப்பு
Name :
Email :
Comment :
எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்