உங்கள் ஈ-மெயிலை இணைக்க
கட்டுரைகள்

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்? நாடு கடந்த தமிழீழம்??

[9-Sep-2009]

- வி. சிவலிங்கம் -

 

 

இலங்கை அரசியல் வரலாற்றிலும், குறிப்பாகத் தமிழர் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 60 ஆண்டு காலத்தின் பாதிப் பகுதியை ஓர் கொடுமையான அனுபவம் காவு கொண்டுள்ளது. ஆசிய நாடு களிடையே மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருந்த இலங்கை அரசியல் கட்டுமானம், நாட்டில் மிக அதிகளவு காலத் திற்கு நீடித்த வன்முறை, பயங்கரவாதம் சார்ந்த அரசியல் என்பன அதனது மட்டத்திற்கு அரசையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. அரசு இயந்திரமும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தனது அணுகுமுறையாக மாற்றிக் கொண்டது. இதனால் மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்ட தோடு, அரசுக் கட்டுமானங்களில் இராணுவத் தலையீடும் செல்வாக்கும் மிக அதிகளவு வளர்ந்துள்ளது.

இவ்வாறு சமூகமும் அரசும் மாற்றமடைந்துள்ளமைக்கு தமிழ் மக்கள் மத்தியிலே மூன்று தசாப்தங்களாக கோலோச்சி வந்த ஜனநாயக விரோத, வன்முறை அரசியலே காரணமாக அமைந்தது எனில் மிகை ஆகாது. இந்த நிலைமைக்குக் காரணம், அரச கட்டுமானம் என்ற இயந்திரம் சிங்கள பேரினவாத அரசின் கருவி யாக தொழிற்பட்டமையாகும். இந்த மூன்று தசாப்த கால அரசியல் என்பது தமிழர்களின் வரலாற்றில் உச்சக்கட்டமாகும். குடியேற்றவாத சக்திகளினால் வழங்கப்பட்ட அரசு நிர்வாகம் பக்கச் சார்பாக செயற்பட்டு சிறுபான்மை இனங்களின், குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின், அரசியல், சமூக, பொருளாதார வாழ்வை ஒடுக்கி உள்ளதால் இனியும் அவ்வாறான அரசு நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாது என்று தீர்மானித்து, ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக் கையை முன்வைத்தே வன்முறை சார்ந்த அரசியல் தொடரப்பட்டது.

ஆயுதம் தாங்கிய வன்முறை அரசியலுக்கான நியாயங் களாக 1976இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத் தையும் அதன் பின்னர் அத்தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் இடம்பெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவையும் ஆதாரமாக வைத்தே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்ப மாகியது. இந்த இரண்டு சம்பவங்களும், அதாவது,  வட்டுக் கோட்டைத் தீர்மானம், 1977ம் ஆண்டின் தேர்தல் வெற்றிகள் என்பன அன்று செயற் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைமைக்கு கிடைத்த ஆணையாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு மக்கள் ஆணை அதன் தலைமைக்கு வழங்கப்பட்டது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்த அமைப்பு தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தமைக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவ்வாறு இருக்கவும் இல்லை. தமிழர் கூட்டணியின் செயற் பாடுகளை மிகவும் தீவிரமாக விமர்சித்து அதன் தலைமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் தமிழ்பேசும் மக்கள் தமிழீழத்திற்கு ஆதரவான ஆணையைத் தமக்கு வழங்கியதாகக் கூறுவது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை யாராவது பெற்றுத் தரவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் தீர்மானத்தையோ ஆணையையோ வழங்கவில்லை. அதனைப் பெறுவதற்கான நம்பிக்கையான தலைமையைத் தேர்ந்தெடுத்து  அதற்கே தமது வாக்குகளையும் வழங்கினார்கள்.

நாடு சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்குள் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ் அரசியல் தலைமைகள் தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம், அரசியல் தலைமைகளின் பலவீனமா? அல்லது அடைய முடியாத கோரிக்கைகளை மக்கள்முன் எடுத்துச் சென்று அந்த மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்து அரசியல் அதிகாரத்தை அமைக்க வாய்ப்பைப் பெற்றார்களா? தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் சிங்கள அரசியல் தலைமைகளே என்ற ஒரே குற்றச்சாட்டு இத்தோல்விகளுக்குப் போதுமான சாட்சியமா? இலங்கையின் அரசியல் தலைமையைப் பல்வேறு கட்சிகளும் தலைவர்களும் அலங்கரித்த நிலையில், சகல அரசியல் தலைமைகளும் ஒரேமாதிரியான போக்கைக் கடைப் பிடித்தார்கள் என்று சப்பைக் கட்டுப் போடமுடியுமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் தமது அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மாற்று வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்தார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்குப் பதிலைத் தேடும்போது தமிழ்த் தலைமைகள் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அனுகூலமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திச் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். இதுவே விடுதலைப்புலிகளின் அழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

கடந்த 60 ஆண்டு கால  தமிழ் அரசியல்  பரந்த, அகன்ற இலங்கைக்குள் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் சமூக பொருளாதார அரசியலை நோக்கித் தனது அரசியலை நகர்த்தவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, விடுதலைப் புலிகள் அமைப்பு என்பவற்றின் அஸ்த மனம் என்பது அதன் தமிழீழக் கோரிக்கையின் இயலாத் தன்மையைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த 60 ஆண்டு கால அரசியல் அனுபவங்களில் இருந்து தமிழ் மக்கள் மாற்றம் பெற வேண்டுமாயின் புதிய அணுகுமுறையை, புதிய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். போர்க்கால நிலைமைகளில் இருந்தும் அதன் அனுபவங்களில் இருந்தும் வெளிக்கிளம்பும் அரசியல் நடை முறை புதிய பாதையை உணர்த்தி நிற்கிறது. கடந்த காலத் தோல்வியின் அனுபவங்கள் காரணமாக எழுந்துள்ள தவிர்க்க முடியாத புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் மாற்றம் பெறுவதை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இதுவே  புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக உள்ளது. இந்த மாற்றங்கள் புதிய வகையிலான அரசியல் அணுகுமுறையை நிர்ப்பந்திக்கிறது. மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் பலம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் என்பது வெறு மனே தமிழ் மக்களின் உரிமைகள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடமுடியாது. முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் காத்திரமான அரசியல் அகதிகளாக மாற்றம் பெற்றுள்ளார்கள். அம்மக் களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத் தேவைகள் கணிசமாக வளர்ந்துள்ளன. அத்துடன் அவை தனித்துவமான அடையாளங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலைமையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான குரல் தமிழர்களின் குரலாக மட்டும் ஒலிக்க முடியாது. அது பரந்த ஏனைய சிறுபான்மை மக்களினதும் ஒருமித்த குரலாக மாற்றம் பெற வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் தோல்வி சிங்கள தேசியவாதத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சிறுபான்மை இனங்களின் எழுச்சியை தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையாலும் இனவாத அரசியலாலும் ஒடுக்கிவிட எண்ணுகிறது.

வளர்ந்துவரும் முதலாளித்துவ திறந்த பொருளாதார ஒழுங்கு முறை, இனவாத அரசியலுடன் கைகோர்த்துச் செல்ல முடியாது. சந்தைப் பொருளாதாரப் போட்டியில் பெரும்பான்மை, சிறுபான்மை, தமிழ், சிங்களம் போன்ற இன மொழி பேதம் அதன் சுமுகமான இயக்கத்திற்குக் குந்தகமாக அமைகிறது. இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் மிக இறுக்கமாப் பிணைக்கப்பட்டிருப்பதால் இலங்கை அரசின் ஆளுமை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சர்வதேச சட்டவிதிகளுக்கு அதுவும் இணங்கிச் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்திக் கப்படுகிறது. சமீபத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக் காலத்தில் தமிழர்கள் பலர் இலங்கை அரசுக்கான அழுத்தங்களை சர்வ தேச அரசுகள் மூலமாகவே பிரயோகித்தார்கள். பல்வேறு சர்வ தேச அரசுகளையும் சமூக நிறுவனங்களையும் நிர்ப்பந்தித் தார்கள். இவை யாவும் தற்போது மாறியுள்ள அரசியல் தேர்வு களையே உணர்த்தி நிற்கின்றன.

இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும்போது, இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின், குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான புதிய வழிமுறை என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள சூழலில் இரண்டு விதமான போக்குகள் காணப்படுகின்றன. ஒரு சாரார் கடந்த நீண்டகால அனுபவங்களில் இருந்து பெற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் ஜனநாயக அரச கட்டுமானத் தைத் தோற்றுவிப்பதும், அவ்வாறான ஓர் நிர்வாகத்தில் தேசிய சிறுபான்மை இனங்களின் பங்களிப்பை சகல மட்டங்களிலும் உறுதி செய்யக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பைத் தோற்றுவிப்பதை நோக்கியே விவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. மறு புறத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் கடந்தகாலத் தோல்விகளுக்குக் காரணமாக இருந்த அம்சங்கள், மீண்டும் புதிய அணுகு முறையில் முன்வைக்கப்படுகின்றன. ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்துருவாக்கம் கடந்த காலத் தோல்விகளின் அடிப்படையில் எந்த அனுபவங்களையும் பெற்றதாகத் தெரிய வில்லை. அத்துடன் 30 வருடகால ஆயுத வன்முறையை நியாயப்படுத்திய அதே சக்திகள் அப்போராட்டத்திற்கான தோல்வியை இலங்கை, இந்திய அரசு மற்றும் சர்வதேச அரசுகளின்மேல் சுமத்தி தோல்விக்கான காரணம் சர்வதேச சூழ்ச்சி அரசியலே எனக்கூறி தமது பங்கினை முற்றாக மூடி மறைக்கும் ஓர் முயற்சியாகவே உள்ளது.

புதிய அத்தியாயம் ஒன்று திறக்கப்படும் இச் சூழலில் வெளிவரும் கருத்துருவாக்கம் மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் அணுகப்பட வேண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகால வன்முறை, அராஜகம் கோரத்தாண்டவம் ஆடிய காலத்தில் கருத்துரீதியான பரந்த பரிமாற்றம் ஒன்றுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆயுத வன்முறையும் இராணுவ அடிப்படையிலான வாதங்களுமே நிகழ்ச்சிப் போக்கைத் தீர்மானித்து வந்தன. தற்போது ஆயுதத்தின் தோல்வி பலராலும் புரியப்பட்டுள்ள நிலையில், பலமான கருத்துப் பரிமாற்றத்தின் தேவை அவசிய மாகியுள்ளது.
இப்பின்னணியைக் கருத்தில் கொண்டே தற்போது முன்வைக் கப்படும் விவாதங்கள் பற்றிய வாதங்கள் முன் வைக்கப்பட வேண்டியுள்ளது. அந்தவகையில் “நாடு கடந்த தமிழீழம்” என்ற கருத்துருவாக்கமும் அதன் நியாயப்படுத்தல்களும் ஆய்வுக்குட் படுத்தப்படவேண்டியுள்ளது.

இக்கோரிக்கையானது எந்த மக்களின் நலன்களை நோக்கி யதாக உள்ளதோ, அந்த மக்களிடம் இருந்து வெளிவரவில்லை. பதிலாக, வெளிநாடுகளில் குறிப்பாக, மேற்கு நாடுகளில் குடியேறி நிரந்தரமாக வாழ்விடங்களை அமைத்துள்ள வசதி படைத்த தமிழர்களில் ஒரு சாராரினால் முன்வைக்கப்படுகிறது. கணிசமான தமிழ் மக்கள் கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் நிரந்தரமாகக் குடியேறி, பலமான சமூகக் குழு வினராக வளர்ந்து வரும் தற்போதைய நிலையிலும் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் அகன்ற இலங்கைத் தேசியத்துக்குள்  தமது சமூக, பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வரும் பின்னணியிலும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைகளை சற்றும் கவனத்திற் கொள்ளாது ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்துருவாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற முயற்சிக்கான ஆதாரவாதமாக இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்றதாகி யுள்ளதால், தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கான முன்னெடுப்பு அதுவென குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்றதாகி உள்ளது என்றால், கிழக்கு மாகாண சபை நிர்வாகம், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வற்றிற்கான உள்ளுராட்சித் தேர்தல்களில் பல அரசியற் கட்சிகள் போட்டியிடுவதை நாம் எவ்வாறு அவதானிக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்களே, இப்பங்களிப்பை நாம் எவ்வாறு வகைப்படுத்துவது?

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் திட்டமிட்ட விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும், கொலை கள், கடத்தல், வன்மையான அடையாள அழிப்பு, நிலப் பறிப்பு, இனச் சுத்திகரிப்பு என்பவற்றால் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்படுவதாக வாதிக்கின்றனர். இவ்வாறான வாதங்கள் தமிழ் அரசியலுக்குப் புதியன அல்ல. கடந்த 60 ஆண்டு காலமாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு மாற்றுத் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. அவையாவும் தோற்றுப் போனமைக்குக் காரணம் என்ன? 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் தந்த விளைவுகள் என்ன? ‘நாடு கடந்த தமிழீழம்’ அதற்கான பரிகாரமாக எதைத் தரப் போகிறது?
இலங்கைத் தீவில் தமிழர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழிகள் எதுவுமே இல்லை என்பதால் தீவுக்கு வெளியிலே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவே இந்த முயற்சி என வாதிக்கப் படுகிறது. இவ்வாறான அனுமானம் உள்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாக சுதந்திரமாக எந்த முயற்சி யையும் மேற்கொள்ளாதவாறு தடுக்கிறது. அர்த்தமுள்ள எந்தத் தீர்வையும் முன்வைக்கவோ, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ இடையூறாக அமைகிறது. ஏனெனில் ‘நாடு கடந்த தமிழீழம்’ என்பது அந்த மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமாக வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் வழிகளைத் தடுக்கிறது.

இத் தமிழீழ அரசின் உருவாக்கம் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு, சில முக்கியமான அம்சங்களை மீளவும் பலப்படுத்த உத்தேசித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அதாவது, 1976இல் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977இல் மக்கள் வழங்கிய தேர்தல் அங்கீகாரம், 1985இல் இடம்பெற்ற திம்புப் பிரகடனம், 2003இல் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை போன்றவற்றை மையமாக வைத்தே அதன் கட்டுமானம் அமையுமென குறிப்பிடுகின்றனர். ஆனால் இத்தீர்மானங்களை முன்னெடுத்த அமைப்புகளின் எந்தவிதமான சம்மதமோ, அங்கீகாரமோ பெறப்படாமல், எவரும் அவற்றை முன்வைத்து அரசியலை முன்னெடுக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. இதில் இத்தமிழீழக் கோரிக்கையின் அடித்தளமாகக் கொள்ளப்பட்டுள்ள

   # தமிழர் ஓர் தேசிய இனம்
   # வடக்கும் கிழக்கும் தமிழர் தாயக நிலம்
   # ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை

என்ற கோட்பாடுகளே முக்கியமான பிரச்சினைக்குரிய அம்சங்களாகவும் புதிய அரசியல் பாதைக்குரிய விவாதப் பொருளாகவும் அமைகிறது.

தமிழர் ஓர் தேசிய இனம் என்பது இலங்கையில் பல்வேறு வழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையிலேயே கடந்த காலப் பேச்சுவார்த்தைகள், தீர்வுகள், என்பன நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பண்டா-செல்வா ஒப்பந்தம், இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பன அதனை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டனவாகும். ‘தமிழர் ஓர் தேசிய இனம்’ என்ற வற்புறுத்தல் ஏனைய சிறுபான்மை இனங்கள் தொடர்பாக இவர்களின் நிலைப்பாட்டினை கேள்விக்குட் படுத்துகிறது. முஸ்லிம் மக்கள் தங்களை ஒரு  ஓர் தேசிய இனமாக வரையறுத்துச் செல்கின்ற நிலைமையில், இக் கோரிக்கையை முன்வைப்போர் அக்கோரிக்கை தொடர்பாகவும் தமது உறவுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஓர் தேசிய இனம் அல்ல எனவும் அவர்களும் தமிழர்களே எனவும் விடுதலைப்புலிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அந்தக் கருத்துக்களின் அபிப்பிராயங்கள் வெளியிடப்பட வேண்டும்.

‘வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்’ என்ற கோட்பாடு சிங்கள மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இக் கோட்பாடு பிரிவினையை மையமாகக் கொண்ட தமிழீழக் கோரிக்கையுடன் இணைத்தே இதுவரை பேசப்பட்டு வருகிறது. இதனால் பிரிவினையை எதிர்ப்பதற்கான பிரதான அம்சமாக தாயகக் கோட்பாடே காணப்படுகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. இதற்கான பிரதான காரணம், அது தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசங்கள் என்பதேயாகும். பிரிவினைக்கான எத்தனிப்புகள் காணப்படும்வரை தமிழர் தாயகக் கோட்பாட்டினை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் வெளிப்படையாக தாயகக் கோட்பாட்டை நிராகரித்தார். கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையும் பிரிவினையை வலியுறுத்தும் தமிழீழக் கோட்பாடும் மிகவும் வெளிப்படையான விதத்தில் நிராகரிக்கும் நிலைக்கு இப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. இனப் பிரச்சினைக்கான சுமுகமான தீர்வை நோக்கிச் செல்வதாயின் பிரிவினையை மையப்படுத்தும் அரசியல் கோரிக்கைகள் நிலைமைகளை மாற்றப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதன் காரணமாக, இப்பிரதேசங்களை இணைத்த ஓர் தனி நிர்வாகத்தை இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவாக்கியது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் நிராகரித்ததன் மூலம், ஓர் நிர்வாகக் கட்டுமான வாய்ப்பை இழக்கச் செய்ததோடு, மிக அதிக அளவிலான உயிர் இழப்பினையும் இந்திய நல்லுறவினையும் இழக்க நேரிட்டது. இனப்பிரச்சினைக் கான சுமுகமான தீர்வு காணப்பட வேண்டு மாயின் சகல இனங்களினதும் நல்லிணக்கம் அவசியமாகிறது. இதனை ஏற்படுத்துவதற்கு இத்தாயகக் கோட்பாடு இடையூறாகவே அமைகிறது. இங்கு தாயகக் கோட்பாடு சரியா, தவறா என்பதை விடவும் இவ்வாறான கோரிக்கைகளை மாற்று வழிகளில் முன்வைக்க முடியாதா என்பதே இங்கு எழும் கேள்வி யாகும்.

சுதந்திர காலத்தில் இருந்து இற்றைவரை வடக்கு, கிழக்கு மக்களிடையே காணப்பட்டு வரும் உறவுநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆயுத வன்முறை முஸ்லிம்கள் மத்தியிலே எழுப்பியுள்ள சந்தேகங்கள், புதிய அரசியல் விழிப்புணர்வுகள், இரு மாகாண இணைப்புக் குறித்த ஏக்கங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாகாணசபை, இணைப்புத் தொடர்பாக மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கில் அரச ஆதரவுடன் இடம்பெறும் புனிதப் பிரதேசப் பிரகடனங்கள், சிங்கள மக்களுக்கான குடியிருப்புகள், ஒரு புறத்தில் தமிழ் மக்களுடனான இணைப்பின் தேவையை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழர் தரப்பில் காணப்படும் அரசியல் தலைமுறையின் மாற்றங்களே மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

ஈழத்தமிழருக்கான தன்னாட்சி உரிமை என்பதும் வடக்கு, கிழக்கு தாயகக் கோட்பாடும் கடந்தகால அரசியல் மூலம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் சாராம்சம் இவற்றை உள்ளடக்கியதாகவும் காலப்போக்கில் ஒரு வளர்ச்சியடைந்த அமைப்பாகவும் வளரும் என எதிர்பார்க் கப்பட்டது. ரோமாபுரி ஒரு நாளில் கட்டி முடிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுவதுபோல, வடக்கு- கிழக்கு தாயகம், தன்னாட்சி உரிமை என்பன ஓர் நீண்டகால எதிர்பார்ப்பில் அமையக்கூடிய நிர்வாகக் கட்டுமானத்தின் மூலமே அது சாத்தியமாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இலங்கையில் நிலவிய பயங்கரவாதம், வன்முறை என்பன அரச நிர்வாகத்தையும் அதன் மட்டத்திற்குக் கீழே இழுத்துச் சென்றுள்ள நிலையில் வடக்கு-கிழக்கு தாயகக்கோட்பாடு, தன்னாட்சி உரிமை என்பன தவறான வழியில் வன்முறையோடு இணைக்கப்பட்டு முன்வைக்கப் பட்டதால் நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன. இந்நிலைமையில் நாட்டில் நிலவிய ஜனநாயகமும் பலவீனப்பட்டுப் போயுள்ள வேளையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் வெல்லப்படவேண்டுமெனில், முதலில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. ஜனநாயகம் தழைக்கும் போதுதான் ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகள் அர்த்த முள்ளவைகளாக மாறுகின்றன. நாடு முழுவதும் இராணுவச் சூழலும் அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியும் தொடர்ந்து நிலவும்போது எவ்வகையான மாற்றம் முதலில் அவசியம் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். இந்த அடிப்படைகளை நோக்கும் போது ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்தியல் மீண்டும் முரண்பாடுகளை நோக்கிச் செல்லும் பயணமாகவே அமைகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்து மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது. கடந்தகால அனுபவங்களும் சர்வதேச அரசுகளின் போக்கும், குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறையும், நாடு கடந்த தமிழீழக் கருத்தியலை முற்றாக நிராகரிப்பனவாகவே உள்ளன. ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள தீர்வை நோக்கி எடுக்கப்படும் முயற்சிகளை இவ்வாறான போக்குகள் தடுத்து விடும். அத்துடன் இலங்கை அரசுக்கு எதிரான சதி முயற்சியாகவே இவை கொள்ளப்படும். நாடு கடந்த தமிழீழக் கோரிக்கையை வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் ஆதரிப்பார்களானால் அவர்கள் தாயகத்திற்குச் செல்வது சிக்கலாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் விபரங்கள் சர்வதேச உளவுப்பிரிவினரின் கைகளில் சிக்கியுள்ளன. இதே நிலையே இத் தமிழ்ஈழக் கோரிக்கையின் பின்னால் செயற்படுபவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

இக் கோரிக்கையை பாலஸ்தீனர்களின் வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்ட நிழல் அரசு, கிழக்குத் திமோர் மக்களால் வெளி நாடுகளில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு போன்றவற்றை, இம் முயற்சிகளுக்கு ஒப்பாகக் காட்டுவது ஒரு வகையில் ஏமாற்று முயற்சியாகும். பாலஸ்தீன மக்களின் வரலாற்று நிகழ்வு சர்வ தேச அரசுகள் இஸ்ரேலிய அரசின் கொடுமையான போக்குகள் என்பன வெளிநாட்டில் இயங்கும் நிலைமைக்குத் தள்ளின. அத்துடன் உள்நாட்டில் போராட்டங்களை நடத்திய தலைவர்களே வெளிநாட்டில் நிழல் அரசைத் தோற்றுவித்துச் செயற்பட்டார்கள். இந்த நிழல் அரசை பல்வேறு நாடுகள் அங்கீகரித்து அதற்கான காரியாலயங்களை நிறுவி தூதுவராலயங்கள் போன்று அவை செயற்பட்டன. இந்த நிழல் அரசே காலப் போக்கில் பாலஸ்தீன அதிகார சபையாக செயற்பட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியை மறைத்து அம்மக்களின் நிழல் அரசை வைத்து, நாடு கடந்த தமிழீழ அரசின் கருத்தியலை நியாயப்படுத்தும் முயற்சியானது, பாலஸ்தீன மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதாகும். இதேபோன்று நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிநாடுகளில் ஏற்படுத்திய நிழல் அரசு போன்றவற்றை உதாரணம் காட்டுவது, அப்போராட்டங்களின் வரலாறுகளைத் திரிபுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கோரிக்கையின் பலம் என்பது அதற்கான நியாயத் திற்தான் தங்கியுள்ளது. இதனை விடுத்து, சர்வதேசரீதியான  போராட்டங்களை உதாரணம் காட்டுவது அல்லது வட்டுக் கோட்டைத் தீர்மானம், 1977இன் தேர்தல் என்பவற்றை இன்னமும் சாட்சியமாக்கி நியாயப்படுத்த முடியுமா? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்த காரணத்தினால்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக் கையை முன்வைத்த பின்னர், இலங்கை - இந்திய ஒப்பந்தம், சந்திரிக்கா அரசுடனும் ரணில் அவர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், ஒஸ்லோ பிரகடனம் என்பன வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின்னரும் மாற்று அணுகுமுறையை நோக்கி மேற்கொண்ட செயற்பாடுகளாகும்.

இந்த வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் முன்னெடுப்புகள் அவற்றின் தொடர்ச்சியாகவே உள்ளன. கடந்த காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவற்றைத் தமது நாட்டுப் பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் முயற்சியாகவே பயன்படுத்தினார்கள். இதுவே சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வரலாற்றுத் தோல்விகளுக்கான பிரதான காரணமாக இருந்தது, பிரிவினை சார்ந்த அரசியலே என்ற முடிவுக்கு நாம் வருவோமாயின், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள தீர்வை நோக்கிச் செல்லும் வழிமுறையை முழுமையாக நம்பி அதன் வழியில் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுவதே பொருத்த மானதாக அமையும்.

உயிர்நிழல்  இதழ் : 31


உயிர்நிழல் சஞ்சிகையின் 31ஆவது இதழ் வெளியாகி இருக்கிறது


13வது திருத்தச்சட்டத்தின் இன்றைய முக்கியத்துவம் : வி. சிவலிங்கம்

 

13கருத்துக்கள்
Related Post
visakan [ 09-09-2009 ]

இன்றைய காலத்தின் தேவைகருதி வந்திருக்கும் இந்த ஆய்வு மிகவும் திறமாக எழுதப்பட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டததின் தனி நாட்டு கனவில் இருந்து புலம் பெயர் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டிய கட்டாயம் இங்கு சொல்லப்பட்டள்ளது. நன்றி திரு சிவலிங்கம் அவர்களே.

இக்பால் [ 09-09-2009 ]

தமிழீழம் என்னும் தனிநாட்டுத்தீர்வு மலையக மற்றும் முஸ்லிம் மக்களை இணைக்கத்தவறியதால் அது தமிழ்தேசிய இனத்திற்கு சிறந்த தீர்வு அல்ல என்று கட்டுரையாளர் சிவலிங்கம் அவர்கள் கூறியிருக்கிறார்.இவர் இந்த நிலையை எப்போது வந்தடைந்தார் என்று புரியவில்லை.ஆனால் 1983ம் ஆண்டளவில் இக் கருத்துக்கள் உரத்துச் சொல்லப்பட்டிருக்குமேயானால் தமிழினம் பல இழப்புகளை தவிர்த்திருக்கமுடியும். மேலும் புலிகளின் தோல்வி எப்படி ஆயுதப்போராட்டத்தின் தோல்வியாகும் என்பதை சிவலிங்கம் அவர்கள் தெளிவாக்க வேண்டும். இதன் மூலம் ஆயுதப்போராட்ட பாதையையே மறுப்பதாக அர்த்தப்பட தோன்றுகிறது. அப்படியாயின் எதிர்காலத்தில் தமிழ்மக்கள் தமது உரிமைகளை எவ்வழிகளில் பெற்றுக்கொள்ள வேண்டும் என சிவலிங்கம் அவர்கள் கருதுகிறார்? அத்துடன் மலையக மற்றும் முஸ்லிம் மக்களை தனி தனித் தேசிய இனமாக கருதுகிறாரா? அவ்வாறாயின் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு உண்டா? இது பற்றி கட்டுரையாளர் தெளிவாக தன் கருத்தை முன்வைப்பாரா?

Sivan [ 10-09-2009 ]

1983 தொடக்கம் மாற்றுக்கருத்தாளர்கள் வகைதொகையின்றி கொள்ளப்பட்டார்கள் என்ற தகவலை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் இக்பால். இக்காலங்களில் கட்டுரையாளர் பேசினாரா என்பதல்ல முக்கியம். கட்டுரையாளர் இப்போது இங்கு என்ன பேசுகின்றார் என்பதே முக்கியமானது.

இக்பால் நீங்கள் தமிழ்மக்களின் உறிமையை வெற்றி கொள்ள ஆயுதப்போராட்டம்தான் தீர்வு என்று நீங்கள் கருதுவீர்களானால் உங்களிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லும் பட்சத்தில். நான் என் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பேன்.

1. நீங்கள் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்
2. உங்கள் வயது என்ன?
3. இருதிக்கட்ட யுத்தத்தின்போது உங்களுக்கு தனிப்பட்ட இழப்புகள் ஏதும் ஏற்பட்டதா?
4. ஆயுதப்போராட்டம் ஒன்றை தொடர்ந்தால் நீங்கள் என்ன பங்களிப்பை வளங்குவீர்கள்?

V. Sivalingam [ 11-09-2009 ]

புகலி வாசகர் இக்பால் அவர்கள் எனது கட்டுரை தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இன்றைய சூழலில் அவர் எழுப்பிய கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதாலும், இன்னும் பல வாசகர்களின் கவனத்தை மேலும் ஈர்ப்பது ஆரோக்கிமான விவாதத்தைத் தூண்ட வழி சமைக்கும் என்ற எண்ணத்தினாலும் எனது கருத்துக்கள் சிலவற்றை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

எழுப்பப்பட்ட கேள்விகள் கட்டுரை வடிவிலான பதில்களை உடையவை என்பதை முதலில் உங்கள் கவனத்திற்குத் தர விரும்புகிறேன்.

தமிழீழம் என்ற தனிநாட்டுத் தீர்வு மலையக மற்றும் முஸ்லீம் மக்களை இணைக்கத் தவறியதால் அது தமிழ்த் தேசிய இனத்திற்கு சிறந்த தீர்வு அல்ல எனக் கூறுவதாகவும் இதனை 83 களில் உரக்கக் கூறியிருந்தால் பல இழப்புகளை தவிர்த்திருக்க முடியும் எனவும் ஆதங்கப்படுகிறார்.

இங்கு சிவலிங்கம் கூறினாரோ இல்லையோ என்பதல்ல முக்கியம். உரிய காலத்தில் அவ்வாறான கருத்துக்கள் இருந்தனவா? கூறப்பட்டதா? என்பதே முக்கியம், பல முக்கியமான கட்சிகள் இதனை மிகவும் தெளிவாக உரக்கக் கூறியே வந்திருந்தன. ஆனால் இதனைக் கேட்கத் தமிழ்ச் சமுதாயம் தயாராக இருக்கவில்லை. ஏனெனில் அது இடதுசாரிகளுக்கு எதிராக செயற்பட்டது. 1975ம் ஆண்டு காங்கேசன்துறை தொகுதியில் ஓர் இடைத் தேர்தல் இடம்பெற்றது. தந்தை செல்வா அவர்கள் அரசியல் அமைப்பு தவறானது எனக் கூறி தனது பதவியை ராஜினாமாச் செய்த பின் தேர்தலில் தமிழீழம் கேட்டு போட்டியிட்டார். இத் தேர்தலில் இலங்கைக் கம்யூ. கட்சின் சார்பில் தோழர். வி. பொன்னம்பலம் போட்டியிட்டார். அவர் அத் தேர்தலில் இலங்கையின் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பிரதேச சுயாட்சி எனக் கூறினார் . யாரும் எதையும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. தமிழ் அரசியல் தலைமையில் ஒரு சாரார் எப்போதுமே தமது நலன்களுக்காக தமது மக்களைப் பலி கொடுக்கத் தயாராக இருந்தார்கள். இல்லையெனில் அப்பாவி மக்கள் போரில் இறந்துபட பல லட்சம் வசதி படைத்தோர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி வாழ முடிகிறது? வறுமையில் வாழும் இளம் சந்ததியினரை தனது உரிமைக்காக போராடும்படி வற்புறுத்தும் இவர்கள் தாம் வாழும் நாடுகளில் தமது உரிமைகளை விற்று அல்லவா வாழ்கிறார்கள்? இது எவ்வாறு சரியாகும்?

புலிகளின் தோல்வி எப்படி ஆயுதப் போராட்டத்தின் தோல்வி ஆகும்?

இது ஆயுதப் போராட்டப் பாதையை மறுப்பதாக அர்த்தமாகிறது என அங்கலாய்க்கிறார். ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவது யார்? என்பதில்தான் அதன் நியாயம் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தினை புலிகள் போன்ற லும்பன்கள் நடத்துவதால் அது விடுதலைப் போராட்டமாக அமைந்துவிடாது. ஆயுதப் போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் அப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தி யார் என்பதில்தான் அதன் நியாயத் தன்மை தங்கியுள்ளது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டம் என்பது மனிதகுல விடிவுக்கான போராட்டமே தவிர தமிழர்களின் பெயரால் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் கூக் குரல் அல்ல. விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பன தத்துவார்த்த நெறித் தன்மை கொண்டன. அவற்றிற்கு அதி உயர்ந்த இலட்சிய நெறி உண்டு. ஒரு வைத்தியர் சகல நோய்களுக்கும் சத்திர சிகிச்சை மூலம் பரிகாரம் காணப்படும் என விளம்பரம் போடுவாரானால் யாராவது நோயாளி அந்த வைத்தியரிடம் செல்வார்களா? நோயின் தன்மைதான் வைத்தியத்தின் முறையை தீர்மானிக்க வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டம் சகல ரோக நிவாரணி அல்ல.

ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் தமிழர்களின் உரிமையை எவ்வாறு பெறமுடியும் என கூறமுடியுமா? என்கிறார்.

தமிழ் மக்கள் மட்டுமல்ல நாட்டின் சகல சிறுபான்மை இனங்களும் தமது அரசியல் உரிமையைப் பெறுவதற்குப் பல மாற்று வழிகள் பல உண்டு. உயிர் நிழல் சஞ்சிகையில் பல கட்டுரைகள் காணப்படுகின்றன. பலரின் ஆக்கங்கள் தற்போது வெளிவருகின்றன. தொடர்ந்து படியுங்கள்.

மலையக, முஸ்லீம் மக்கள் தனி இனமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

யார் எந்த இனம் எனத் தீர்மானிப்பது யார்? அந்த மக்களா? அல்லது வெளியாரா? சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை, தமிழ்க் குறும் தேசியவாத்தின் ஒடுக்குமுறை என்பன அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. அவர்கள் தமது பாதுகாப்புக் கருதி தமது மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறார்கள். புலிகள் முஸ்லீம் மக்களை ஏன் விரட்டினார்கள்? அவர்கள் முஸ்லீம்கள் என்பதால்தான் என்பதை மறுக்க முடியுமா? ஒடுக்குமுறைதான் அவர்களின் அடையாளத்தை நோக்கித் தள்ளுகிறது. இனம் என்பதற்கான வரவிலக்கணங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமானது.

அவர்கள் தனி இனம் எனில் பிரிந்து செல்லும் உரிமை உண்டா? ஏன்ற கேள்வியை எழுப்புகிறார்.

திருமணம் செய்பவர் எவரும் விவாகரத்து உண்டா? என்ற கேள்வியை எழுப்பி விவாகத்திற்குச் செல்வதில்லை. தவிர்க்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கான ஏற்பாட்டை உலக நாடுகளே செய்யும். அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனது கட்டுரை விவாகரத்து என்ற கேள்வி எழாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றியே கூறியுள்ளது என நம்புகிறேன்.

iqpal [ 12-09-2009 ]

மதிப்புக்குரிய சிவன் அவர்களுக்கு

(1)நீங்கள் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்?

பதில்:-நான் எந்த நாட்டில் வசிக்கிறேன் என்பதல்ல முக்கியம்.நான் போராட்டத்தில் எந்தளவு அக்கறையுடன் இருக்கிறேன் என்பதே அவசியமானது.அப்படியாயின் உங்கள் அளவுக்கு எனக்கும் உரிமை இருப்பதாகவே உணர்கிறேன்.

(2)உங்கள் வயது என்ன?

பதில்:-இந்த கேள்வியை படிக்கும்போது அமிர்தலிங்கத்தின் ஞாபகம்தான் வருகிறது.ஏனெனில் 1981ம் ஆண்டு கிராமயாத்திரையின் போது அவரிடம் நான் கேள்வி கேட்டபோது அவரும் இப்படித்தான் என்னிடம்\" உன் வயது என்ன?\" என்று கேட்டார்.அதாவது தான் அனபவம் கூடியவர் என்றும் தன்னிடம் கேள்வி கேட்க எனக்கு வயது பத்தாது என்ற நக்கல் தொக்கி நின்றது.அது மாதிரித்தான் உங்கள் கேள்வியும் தோன்றுகிறது.

(3)இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உங்களுக்கு தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டதா?

பதில்:-இந்த போராட்டத்தில் நான் சந்தித்த இழப்புகள் ஏராளம்.அந்த இழப்புகளை காட்டி புலம்ப நான் விரும்பவில்லை.மேலும் இழப்பு ஏற்பட்டவன்தான் போராட்டத்தைப்பற்றி பெச முடியும் என்ற உங்கள் வாதம் \\\"செத்தவன்தான் சாவைப்பற்றி கதைக்க முடியும்\\\" என்று கூறுவதற்கு ஒப்பானது.

(4)ஆயுதப்போராட்டம் தொடங்கினால் உங்கள் பங்களிப்பு என்ன?

பதில்:-நான் இப்போதும் முழுமையாக போராட்டத்திற்காக வாழ்கிறேன்.இனியும் அவ்வாறே வாழ்வேன் என உறுதியளிக்கிறேன்.

iqpal [ 12-09-2009 ]

தாங்கள் தேசிய இனமா என்பதையும் பிரிந்து போக வேண்டுமா என்பதையும் அந்த மக்களான முஸ்லிம் மக்களும் மலையக மக்களும்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

அப்படியாயின் நாளைக்கு புங்குடுதீவு மக்கள் தங்களை தனித்தேசிய இனம் என்றும் தாங்கள் பிரிந்து போக விரும்புவதாக கூறினால் அதை அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் ஏற்றுக்கொள்வாரா? மேலும் மலையக முஸ்லிம் மக்கள் தனித் தேசிய இனமா? அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டா? என்றுதான் நான் கேள்வி கேட்டிருந்தேனேயொழிய அவர்கள் பிரிந்து போகவேண்டுமா என நான் கேட்கவில்லை.

எனவே என் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்வதை தவிர்த்து \"விவாகரத்தை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பற்றியே நான பேசுகிறேன்\" என சமாளிக்கிறார்.

இங்கு நான் கருத்து எழுதுவதன் நோக்கம் என்னவெனில் நாம் அனைவரும் இப்பவாவது தமிழீழம் தொடர்பாக உளப்பூர்வமாக கலந்துரையாட வேண்டும் என்பதே. மீண்டும் 1983ம் ஆண்டு நிலைமைக்கு செல்லக்கூடாது என்பதே. மழை பெய்தால் புற்றீசல் கிளம்பி வருவதுபோல் இன்று நிறைய ஆரசியல் ஆய்வாளர்கள் புறப்பட்டு வருகிறார்கள். புது புதுசாக நிறைய கதைகள் எடுத்து விடுகிறார்கள். தமிழீழத்தை முன்வைத்து அழிவு அரசியலுக்கு துணை நின்றவர்கள் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி \"நாங்கள் அப்பவே சொன்னோம். தமிழீழம் சரிவராது என்று. ஆனால் யாரும் கேட்கவில்லை\" என்று அரசியல் ஆய்வாக பீற்றிக்கொள்கிறார்கள்.

இங்கு பாதையாது என்று கேட்டதற்கு \"நிறைய பாதை உள்ளது. உயிர்நிழல் சஞ்சிகை படியுங்கள்\" என்கிறார். நேரிடையாக தனது கருத்துக்களை கூறுவதற்கு இவருக்கு என்ன தயக்கம் என்பது புரியவில்லை.

Gopal [ 12-09-2009 ]

இக்பால் says : தாங்கள் தேசிய இனமா என்பதையும் பிரிந்து போக வேண்டுமா என்பதையும் அந்த மக்களான முஸ்லிம் மக்களும் மலையக மக்களும்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

அப்படியாயின் நாளைக்கு புங்குடுதீவு மக்கள் தங்களை தனித்தேசிய இனம் என்றும் தாங்கள் பிரிந்து போக விரும்புவதாக கூறினால் அதை அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?

V. Sivalingam says : திருமணம் செய்பவர் எவரும் விவாகரத்து உண்டா? என்ற கேள்வியை எழுப்பி விவாகத்திற்குச் செல்வதில்லை. தவிர்க்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கான ஏற்பாட்டை உலக நாடுகளே செய்யும். அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனது கட்டுரை விவாகரத்து என்ற கேள்வி எழாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றியே கூறியுள்ளது என நம்புகிறேன்.

karan [ 12-09-2009 ]

இக்பால் சுட்டிக்காட்டியிருக்கும் விடயங்கள் நியாயமானவை.இது குறித்து ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் சுற்றிவழைக்காமல் நேரிடையாக பதில் சொல்வது எது சரியென்பதை இனம் காண எங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

ட்ரொக்சிசவாத கட்சியான லங்கா சமமாஜிக் கட்சியில் இருந்து அதன் இனவாதப்போக்கு காரணமாக பிரிந்து வந்து தமிழீழத்தை முன்வைத்த ரெலோ போன்ற இயக்கங்களுடன் நீண்ட காலமாக பணி புரிந்த சிவலிங்கம் அவர்கள் தனது அனுபவங்களினூடாக தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பது நிச்சயம் இன்றைய இளம் சந்ததியினருக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

செல்வச்சந்திரன் [ 12-09-2009 ]

நாளைக்கு புங்குடுதீவு மக்கள் தங்களை தனித்தேசிய இனம் என்றும் தாங்கள் பிரிந்து போக விரும்புவதாக கூறினால் அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பெருந்தன்மையை நாம் வளர்த்தாக வேண்டும்.

சுதா [ 13-09-2009 ]

ஒரு தேசிய இனத்திற்கு பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமையை வழங்குவது அந்த தேசிய இனம் வளருவதற்கும் அதனூடாக ஒட்டுமொத்த சமுதாயம் வளருவதற்காகவுமே.

எனவேதான் மாக்சிசவாதிகள் ஒரு தேசிய இனம் பிரிவினையை முன்வைக்கும் போது அது சமுதாய வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? அது முற்போக்கானதா? எனப் பார்த்து அதனை ஆதரிக்கிறார்கள். எனவே இந் நிலையில் புங்குடுதீவு மக்கள் பிரிவினையை முன்வைத்தால் அது தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு நன்மை பயக்குமா என்று பார்த்து ஆதரவு வழங்கவேண்டுமேயொழிய பிற்போக்குவாதிகளால் முன்வைக்கப்படும் பிற்போக்கு தனமான பிரிவினைக் கோரிக்கைகளுக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கக்கூடாது.

எனவே அந்த புங்குடுதீவு மக்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் பெரும் தன்மை வேண்டும் எனக் கோருவது அதாவது பெரும்தன்மையின் பேரால் அந்த பிரிவினையை ஆதரிக்க கோருவது பொறுப்பற்ற வாதம் ஆகும்.

இது மக்களின் மீது உண்மையான அக்கறை அற்ற போக்கு ஆகும். நான் பெரிதும் மதிப்பு வைத்திருக்கும் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் இத்தகைய போக்கிற்கு இடம் அளிக்கமாட்டார் என நம்புகிறேன்.

Sivan [ 13-09-2009 ]

அன்புக்குரிய இக்பால் அவர்களுக்கு,

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. என் கேள்விகள் உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள். உங்களிடம் நான் இந்தக் கேள்விகளைக் கேட்க ஏதுவாக இருந்த காரணிகளை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. நீங்கள் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்!

இன்று இலங்கை என்ற நாடு மொத்தத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி இருக்கின்றது. இவற்றுக்கு நேரடியாக முகம் கொடுப்பது இலங்கையில் உள்ள அத்தனை மக்களும்தான். வெளிநாடுகளில் உள்ளவர்களோ அல்லது நலன்விரும்பிகளோ இவற்றின் தாக்கங்களை எந்தளவு புரிந்து கொள்கிறார்கள் என்ற சந்தேகம் என்னிடம் பலமாக உண்டு.

உதாரணமாக, புலிகளின் வீழ்ச்சியின் பின் புகலிடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஆச்சரியப்படும் வகையில் ஸ்தம்பிதம் அடைந்தது. வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும்போது இங்கு இவர்கள் “பனைமரத்திலை வெளவாலா புலிகளுக்கே சவாலா’ “வீ வோன்ற் தமிழீழம்” போன்ற கோசங்களை முன்வைத்தார்கள். பின்னர் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டபோது இவர்கள் மக்களின் நலன் சார்ந்து சிந்தியாமல் புலிகளின் வீழ்ச்சியை எண்ணிக் கண்ணீர் வடித்தார்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த இந்தப் பேரவலத்தின் வேதனையையும் அதன் நோய்த்தன்மையையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்வதில் பாரிய இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை நாம் கருத்தில்கொண்டே செயற்படுதல் வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

புகலிடத்தில் இருந்தபடி இலங்கையில் உள்ள மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க நாம் உதவ முடியமேயன்றி தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் அது அவர்களின் உரிமை. தனிப்பட்டரீதியில் அம்மக்களின் விடுதலையை நாம் விரும்புவோமானால் நாளையே நாம் எமது சொந்த நலன்களைக் கடந்து அவர்களுடன் கலக்கத் தயாராக வேண்டும்.

2. உங்கள் வயதென்ன!

ஈழவிடுதலைப் போராட்டம் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவற்றில் ஈடுபட்டபவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதைக் கொண்டவர்களாகவும் 25 வயதிற்குட்டபட்டவர்களாகவும் இருந்தார்கள். இவர்களில் பலர் தமக்குத் தேவையான அரசியல் உரிமை தொடர்பான குறைந்தபட்ச புரிதலில் இருந்தார்கள். அத்தோடு இவர்கள் பலமாக இருந்தார்கள். பலம் என இங்கு நான் குறிப்பிடுவது, மனதில் அவர்கள் சோர்வற்றவர்களாக இருந்தார்கள். அப்போது மரணத்தின் வலியையும் பேரவலத்தின் கொடூரத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்கள் போராடத் தயாரானார்கள். ஆனால் அதன் பின்னான காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகள், உட்படுகொலைகள், துரோகியாக்குதல் போன்ற நடவடிக்கைகளின் பலனாக ஆயுதப் போராட்டத்தின் நோக்கமும் அதன் செயற்பாடுகளும் மெல்ல மெல்ல மழுங்க ஆரம்பித்தது. அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைமுறையொன்றின் தலையில் சுமத்தப்பட்டது.

இவ்வாறு சுமத்தப்பட்ட இத்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் யுத்தத்தின் வடுக்களையே உடலாகக் கொண்டார்கள். இவர்கள் கல்விக்காக ஏங்கினார்கள். இந்த அவலநிலையில் இருந்து வெளியேற நாட்டைவிட்டு எப்படி ஓடலாம் என்று கனவு கண்டார்கள். சோர்வின் உச்சத்தில் அவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். இவர்கள் நாட்டின் மூலைமுடுக்கிலெல்லாம் வசிக்கிறார்கள். இறுதிக்கட்ட யுத்தத்தில் இவர்கள்தான் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள். இன்றும் தடுப்பு முகாம்களுக்குள் இவர்கள்தான் பலிக்கடாக்கள்.

வீரோபதேசம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் இவர்கள் கையில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இவர்கள்தான் வகை தொகையின்றிக் களமுனையில் கொல்லப்பட்டவர்கள். நாளை ஆயுதப்போராட்டம் ஒன்று தொடங்கவேண்டுமென விரும்பினால் போராளியாக யார் செல்வது? இன்று ஏதிலிகளாக ‘விடுதலைப்புலிகள்’ என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கம் இளைஞர்களா அல்லது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நாடு பூராவும் திரியும் இளைஞர்களா? யாராவது வருவார்கள் தம்மைக் காப்பாற்ற என்று ஏங்கியபடி பல்லாயிரம்பேர் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களை முதலில் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களை ஆயுதத்தைத் தூக்கச் சொல்லும் உரிமை நமக்கில்லை.

ஒருவேளை நாளை ஓர் ஆயுதப் போராட்டம் தேவை என்ற கோஷம் வருமேயானால் அது இலங்கையில் இருக்கும் இளைஞர்களிடம் இருந்தே வரவேண்டும். அதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லை. இதைக் கடந்து அவர்களை ஆயுதங்களைத் தூக்கச் சொல்லும் அருகதை வேறு எந்தக் கொம்பருக்கும் இல்லை.

நண்பருக்கு, ஏனைய கேள்விகளுக்குமான பதில்களும் அல்லது விளக்கங்களும் மேலேயுள்ளதில் அடங்கியுள்ளதாக நான் கருதுவதால் அவற்றிற்கான பிரத்தியேக விளங்கங்களைத் தவிர்த்திருக்கிறேன்.

இக்பால் [ 13-09-2009 ]

அன்பு நண்பர் சிவன் அவர்களுக்கு!
தங்கள் கேள்விகள் என்னை காயப்படுத்தவில்லை.ஆனால் தங்கள் கருத்துக்கள் தவறானவை. அவை இனவெறி அரசின் நிலைக்கு துணைபுரிவதாக இருக்கிறதே என்பதை எண்ணித்தான் வருத்தமடைகிறேன்.

இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் எனில் இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.எனவே புலம் பெயர்ந்த மக்களுக்கு போராட உரிமை இல்லை என்ற உங்கள் வாதம் அந்த மக்களில் எட்டில் ஒரு பங்கினரின் உரிமையை மறுப்பதாக அமைகிறது.அத்துடன் புலம் பெயர் சமூகத்தை நீங்கள் பலவீனமாக பார்க்கும் அதேவேளையில் நான் அதை பலமானதாகவே பார்க்கிறேன்.

இன்றைய நிலையில் இச் சமூகம் நிச்சயம் பயன் உள்ளவகையில் தன் பங்களிப்பை செய்யமுடியும். எனவே நீண்ட அனுபவத்தின் சொந்தக்காரர்களாக இருக்கும் நீங்கள் இந்த துடிப்பு மிக்க இளைஞர் கூட்டத்தை எப்படி பயன் உள்ள வகையில் ஈடுபடுத்தலாம் என்றுதான் சிந்திக்கவேண்டுமேயொழிய அவர்கள்மீது விரக்தியுற்று ஒதுக்குவதாக இருக்கக்கூடாது. அவ்வாறு செய்யப்படுமானால் அது இனவெறி அரசுக்கு துணைசெய்வதாகவே அமைந்துவிடும்.

புலம் பெயர் சமூகத்தில் போராட புறப்பட்ட இளைஞர்கள் வயது குறைந்தவர்கள். அரசியல் அறிவு அற்றவர்கள் என்று மட்டம் தட்டுவது தவறாகும்.இன்று இப்படி கூறுபவர்கள் தாங்கள் என்ன வயதில் அந்தக்காலத்தில் புறப்பட்டனர் என்பதையும் அப்போது யாராவது இவர்களை இந்தக்காரணங்களைக்கூறி ஒதுக்கியிருந்தால் இன்று இவர்கள் இத்தனை அனுபவங்களுடன் எமக்கு கிடைத்திருப்பார்களா? மேலும் போராட வருபவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள்தான் அரசியல் அறிவு கொடுக்கவேண்டுமேயொழிய அரசியல் அறிவு பெற்றபின்புதான் எல்லோரும் போராட வரவேண்டும் என்று கருதுவது தவறாகும்.

புரட்சியோ அல்லது போராட்டமோ எற்றுமதி செய்யக்கூடாது என்பது சரிதான்.ஆனால் சூழ்நிலைகாரணமாக புலம்பெயர்ந்த மக்கள் தங்களுக்காக போராடக்கூடாது என்பதற்கு இதனை பொருத்தக்கூடாது. தவிர்க்கமுடியாத காரணங்களால் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் போராடி வெற்றி பெற்ற போராட்டங்கள் பல வரலாற்றில் உதாரணமாக திகழும்போது இலங்கைத் தமிழ்மக்களுக்கு மட்டும் இவ்வாறு காரணம் காட்டி மறுப்பதென்பது அது இனவெறி அரசுக்கு துணைபுரியும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்கும் நண்பரே!

நண்பர் சிவன் அவர்களுக்கு ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
நான் ஒரு இலங்கைத் தமிழன்.நான் தமிழன் என்ற காரணத்திற்காக அடக்கி ஒடுக்கப்படுகிறேன். எனவே அதற்கு எதிராக போராடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.எனது மூதாதையர் அன்று போராடி வென்றிருந்தால் இன்று நான் போராடியிருக்க வேண்டியதில்லை.

அதுபோல் இந்த நிலையை என் அடுத்த பரம்பரைக்கும் விட்டுச்செல்ல நான் விரும்பவில்லை. எனவே இங்கு நான் போராட வேண்டியிருப்பது என் விருப்பம் மட்டுமல்ல நிர்ப்பந்தமும் கூட. இதையே புரட்சிவாதிகள் எமது வரலாற்றுக்கடமை என்கின்றனர். ஆனால் எனக்கு அவர்கள் போல் அந்தளவுக்கு சிந்தாந்த தெளிவு இல்லை. எனினும் எனக்கு தெரிந்த அளவில் என்னுடைய முயற்சிகளை தொடர்கிறேன்.

இந்த உலகில் எந்தவித இன பேதமற்ற அடக்கு முறையற்ற வர்க்க சுரண்டல் அற்ற ஒரு இடம் இருந்தால் அதை எனக்கு காட்டுங்கள். அங்கு சென்று நிம்மதியாக வாழ விரும்புகிறேன். இல்லையேல் அப்படியான ஒரு இடம் கிடைக்கும் வரை போராடுவதைத் தவிர எனக்கு வேறு என்ன வழி?

அமைதியாக கேட்டபோது துப்பாக்கி முனையில் குரல்வளை நசுக்கப்படும்போது அந்த துப்பாக்கியை பறித்து திருப்பிப்பிடிக்க முனைகிறேன். இவ்வாறு நான் துப்பாக்கியை ஏந்துவதை ஆயுதப் போராட்டம் என்கிறேன். ஆனால் என்னை ஆயுதம் தூக்க நிர்ப்பந்தித்தவர்கள் இதை பயங்கரவாதம் என்கின்றனர்.

மனட்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் இதில் என் தவறு எங்கே? எனவே இன்று என் முன்னுள்ள கேள்வி என்னவெனில் எனது அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடுவதா? அல்லது இந்த அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு காலம் பூராவும் அடிமையாக வாழ்வதா?காட்டிக்கொடுத்து கருங்காலி வாழ்க்கை வாழ விரும்புவர்களும் தங்களுடைய அடிமை வாழ்வை உணரமுடியாத அல்லது அந்த வாழ்வை இனிதானது என சுவைத்து மகிழும் பையித்தியக்காரர்களுமே தொடர்ந்து அடிமையாக இருக்க வேண்டும் என விரும்புவர். மாறாக கொஞ்சமேனும் சுய புத்தியுள்ளவர்கள் கெளரவத்துடன் நிம்மதியாக வாழ விரும்புவர்கள் நிச்சயம் போராட்டப்பாதை தேர்ந்தெடுப்பர்.

அந்த வகையிலே நானும் போராடுவதோடு அது பற்றிய கருத்துக்களை தெரிவித்தென். எனவே இனி நீங்கள் எப்படிப்பட்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உங்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன் நண்பரே.

வெண்காட்டான் [ 16-10-2009 ]

ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் பங்கு என்ன, அது என்ன அநியாயங்கள் விளைவித்தது என்று உங்களால் ஏன் எழுத வில்லை. புலிகளின் தோல்விக்கு 1000 சரியான காரணங்கள் சொல்லும் நீங்கள் ஏன் இந்தியாவை ஒரு முறையேனும் குற்றம் சாட்டவில்லை?
இக்பால் அவர்களே.. உங்கள் பதில்கள் சாட்டையடி.. ஒருசில குறிப்பிட்ட விடயங்ளே அனைத்து ஆய்வாளர்களும் எழுதிவருகிறார்கள். சராசரியாக பார்க்கும்போது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.புலிகளை விமர்சனத்திற்கும் குற்றம் கூறுவதற்கும் வந்திருக்கும் இவர்கள் யாருமே எவ்விதத்திலும் இந்தியாவை மயிரளவேனும் குற்றமோ விமர்சனமோ சொல்வதில்லை.

Post your Comments
English   பாமினி உச்சரிப்பு
Name :
Email :
Comment :
எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்