உங்கள் ஈ-மெயிலை இணைக்க
கட்டுரைகள்

யாழ்ப்பாண அரசர்கள், தொன்மங்களும் புனைவுகளும்: ச. தில்லைநடேசன்

[19-Jun-2009]

தமிழக-ஈழ அரசு, அரசர்களின் தோற்றம் அரச ஆளுமை வெளிகளின் பங்கீடுகள் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் தொன்மங்களைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளாகவே இருக்கின்றன. இவை பற்றிய விரிந்த ஆய்வுகளும் நானில, வர்ண, சாதி, சமய படிநிலைகளுக்கூடாகவே பெரும்பாலும் பயணிக்கின்றது.

சமூகம் உண்மையில் பன்முக இயக்கம் உடையது. இந்திய-தமிழக அரச அதிகார வெளிகள் பல சமயம் வர்ணாச்சிரம தர்ம சூத்திரங்களுக்குள் அடங்கி விடுவதில்லை.

யாழ்ப்பாண அரசர்கள் என்று சொல்லப்படும் ஆரியச் சக்கர வர்த்திகளின் மூலம் பற்றிய பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது. அரசர்கால, போர்த்துக்கேய - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் தொன்மங்களை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் வரலாற்றுப் புனைவுகளை கேள்விக்குள்ளாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செகராசசேகரமாலை, கைலாய மாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவ மாலை, தட்சண கைலாய புராணம் போன்ற நுhல்களையும், போர்த்துக்கேய ஒல்லாந்த குறிப்புக்களையும் வாய்மொழிக் கதைகளையும் கொண்டு யாழ்ப்பாண சரித்திரம் பலரால் எழுதப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இராச்சியம் என்று சொல்லப்படும் அரசுருவாக்கம் கி.பி. 13ம் நுhற்றாண்டிலேயே உருவானது எனும் கருத்துடைய வரலாற்றாய்வாளர்கள் கலிங்க மகானுடன் அதன் தோற்றத்தை எடுத்துக் கொள்வார்கள்.

கலிங்க நாட்டில் இருந்து கி. பி. 1215இல் தமிழ் கேரள படைவீரர்களுடன் வந்து இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய கலிங்க மகான் வழி வந்தவர்களே ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற கருத்து இன்று தவறென நிரூபிக்கப்பட்டு விட்டது. கி. பி. 1284இல் பாண்டிய அரசு சார்பாக படை எடுத்து வந்த படைத்தளபதியான ஆரியச் சக்கரவர்த்திகள் வழிவந்த வர்களே யாழ்ப்பாண அரசர்கள் என்பது பாண்டிய நாட்டு சாசனங் களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

இப்பாண்டிய நாட்டு படைத்தளபதிகளான ஆரியச் சக்கர வர்த்திகள் யார்? இவர்களின் பூர்வீகம் என்ன? இவர்கள் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் வரலாற்றுப் புனைவுகளின் உண்மை யாது? இவ்வுருவாக்கத்தில் வர்ணாச்சிர தர்ம மனோநிலை எவ்வாறு செயற்பட்டுள்ளது? இவை எல்லாம் எம் முன்னால் உள்ள கேள்விகள்.

யாழ்ப்பாண இலக்கிய மூலங்களும் சூளவம்சம், பூஜவலிய போன்ற பாளி நுhல்களும் போர்த்துக்கேய, ஒல்லாந்தர் குறிப்புகளும் யாழ்ப்பாண அரசர் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தருகின்றது. இவைகளைப் பரிசீலித்துக் கொள்வோம்.

யாழ்ப்பாணத்து முதல் மன்னன் சிங்கை ஆரியன் பாண்டி மழவனால் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சோழ அரசகுமாரன் எனவும் அவன் நல்லூரில் முடிசூடப்பட்டான் என்று கூறும் கைலாய மாலை நுhல்.
யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நுhல் சோழ நாட்டில் இருந்து இராச உத்தியோகத்திற்கேற்ற படிப்புக் கொண்டிருந்த திசையுக்கிர சோழன் மகன் சிங்க கேதுவுக்கு மருமகனும் சூரிய வம்சத்துவனுமானவனே சிங்கையாரியன் என்று கூறுகின்றது.

செகராசசேகர மாலை எனும் நுhல் இராவண சங்காரத் துக்குப் பின்பு இராமன் திரும்பிச் செல்லுமிடத்து சேது எனப்படும் இராமேஸ்வரத்தில் ஒரு சிவாலயத்தை அமைத்து அங்கு ஆராதனை செய்வதற்கென 512 அந்தணர்களைக் குடியிருத்தி அவர்களில் இருவருக்கு ஆரிய வேந்து(ஆரியச் சக்கரவர்த்தி) என்ற புகழ்மிக்க விருதினையும் விடைக்கொடி முதலான அரச சின்னங்களையும் வழங்கினார் எனக் கூறும்.

பாதிரியார் குவேறோஸ் அவர்கள், கூர்சிரப் பகுதியை உற்பத்தி ஸ்தானமாகக் கொண்ட ஆரியர்கள் என்றழைக் கப்படும் பிராமணர்கள் தாங்கள் இராச குலத்தினர் என்று வந்து மதுரை நாயக்கர்கள் அங்கீகாரத்தோடு இராமனார் கோயில் என்னும் ஆலயத்தை நிர்மாணித்தார்கள். அங்கிருந்து யாழ்ப்பாண அரசர்களோடு உறவாடத் தொடங்கியதனால் அந்த அரசர்களிலொருவனுடைய குமாரத்தியை இவர்களில் ஒருவன் வதுவையாற்றினான். பின் ஆவ் ஆரியனுடைய சந்ததியால் அவ் இராச்சியத்துக்கு உரிமைகாரன் ஆனான்.

சூள வம்சம் எனும் பாளி நுhல் “முன்பு பஞ்சம் ஒன்று நிலவிய காலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த சகோதரர் களான ஐந்து மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ் சேனாதிபதியின் தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார்கள். அவன் ஆரியனல்லன். ஆனாலும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரதானியாக விளங்கினான்...”

இக்குறிப்புகள் ஆரியச் சக்கரவர்த்திகளை

1. சோழ அரசகுமாரன்
2. பிராமணர்
3. பிராமணர்கள்- அரசகுடும்பத்தோடு திருமணம் செய்து கொண்டவர்கள் பின்பு அரசர்களானார்கள்.
4. ஆரியச் சக்கரவர்த்திகள்  ஆரியர்கள் இல்லை என்ற குறிப்புகளைத் தருகின்றது.

யாழ்ப்பாண இலக்கிய மூலங்களின் புனைவுகள் ஆரியன் என்ற தொன்மத்தை சுற்றி எழுந்தததன் விளைவுகளே. கைலாய மாலையும், யாழ்ப்பாண வைபவமாலையும்; செவிவழிக் கதை களைப்பதிவு செய்கின்றன என்று கொள்ளலாம்.

வரலாற்றுத் தொன்மங்கள் ஏன் எழுகின்றது என்ற கேள்வி இன்று முக்கியமானது. மனித மனம் காரணம் புரியாதபோது, வரலாறு புரியாத போது ஐதீகங்களைத் தொன்மைகளை உருவாக்கிக் கொள்கின்றது.
செகராசசேகரமாலை கூறும் தகவல் ஆரியன் என்ற பெயரை ஒட்டி எழுந்த புனைவாகும். அத்துடன் ஆரியச் சக்கரவர்த்தியின் பூர்வீக இடமான இராமேஸ்வரத்தை ஒட்டியும் இப்புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இராமாயணத்துக்கும் இராமேஸ்வரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

இராமயணம் மூலக்கதை பாணர்களால் வடஇந்தியாவில் பாடி வந்த நாடோடிப் பாடலாகும். பின்பு அதனைப் பல புலவர்கள் தங்கள் காலகட்டத்துக்கு ஏற்ப காவியங்கள் செய்துள்ளார்கள். மூல இராமாயணக் கதையில் தென்னிந்தியா பற்றிய குறிப்பே இல்லை. வால்மீகி இராமாயணத்தில் ஒரு சில குறிப்புகள் உண்டு. அதுவும் பிற்காலச் சேர்க்கையாகக் கருதப்படுகின்றது. கம்ப ராமாயணத்தில்தான் தென்னிந்திய இலங்கை பற்றிய சேர்க்கை அதிகளவில் உண்டு.

இராமேஸ்வரத்துக்கும் இராமனுக்குமான தொடர்பு பின்பு இட்டுக் கட்டப்பட்ட புராணம் ஆகும்.
பாதர் குவேறோஸ்க்கு கிடைத்த வாய்மொழிக்கதையும் அப்படியான ஒரு கதையே. அவரது குறிப்புகள் வரலாற்று ரீதியில் தவறான குறிப்புகளைக் கொண்டுள்ளது. மதுரை நாயக்கர் அரசின் தோற்றம் பிற்காலத்தை சேர்ந்தது. யாழ்ப்பாண அரசின் தோற்ற காலம் 13ம் நுhற்றாண்டு எனக் கொண்ட நாயக்கர் ஆட்சி 16ம் நுhற்றாண்டைச் சேர்ந்தது.

சூளவம்ச குறிப்பில் வரலாற்று உண்மை உண்டு. நவீன வர லாற்றாய்வாளர்களில் ஒருவரான சி. பத்மநாதன் ஆரியன் என் பதை பிராமணர் என்றே ஊகிக்கின்றார். அதற்கு எந்த ஆதாரமும் அவர் காட்டவில்லை. இதனை ஒட்டிய கேள்வியை சி.க. சிற்றம் பலம் எழுப்பினாலும் அதற்கான விடையை அவரும் தேடினா ரில்லை. (நுhல்-யாழ்ப்பாண இராச்சியம்-வரலாற்று அறிமுகப்பகுதி)

ஆரியச் சக்கரவர்த்தியின் பூர்வீகத்தைப் பற்றி வேறு ஒரு மாற்றுக் கருத்தை சிறு குறிப்பாகத் தருகின்றது. ஆய்வட்ட கட்டுரைகள் என்னும் நுhல். இக் குறிப்பு சோழ நாட்டு பட்டினவர் (துறைமுக பரதவர்) ஆரியர் என்று அழைக்கப்படுவார்கள் என்ற தகவலைத் தந்து யாழ்ப்பாண அரசர்கள் அப்பட்டினவர் வழிவந்த வர்களாக இருக்கலாம் எனக் கருதுகின்றது. இக் கருத்தினை அடியொற்றி எமது தேடலை எடுத்துச் செல்வோம்.

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண் டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந் தார்கள். அவ்வுட் பிரிவுகள் தங்கள் தங்களுக்கென தொன் மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு.

இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும்.
பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

யாழ்ப்பாண அரசர்களின் குலவிருதுகள்> சின்னங்கள் குலதெய்வம் என்பதனை மீள்ஆய்வு செய்வதன்மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கின்றது.

யாழ்ப்பாண அரசர்களுக்கான குல விருதுகள்

1. ஆரியச் சக்கரவர்த்தி
2. சிங்கை ஆரியன்
3. காங்கேயன்
4. கங்கை நாடன்
5. சேது காவலன்

சின்னங்கள்:

1. கொடி-நந்தி
2. சேது எனும் மங்கலச்சொல்

ஆரியச் சக்கரவர்த்தி - சிங்கை ஆரியன்

ஆரியச் சக்கரவர்த்தி என்ற பெயருக்கு பல்வேறு விளக் கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கை ஆரியனை கலிங்க மகானாக கொள்ளும் சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கையின் பெரும்பகுதியை கலிங்க மகான் ஆட்சி செய்ததனால் சக்கர வர்த்தி என்ற பெயரைப் பெற்றான் என்கின்றனர்.

ஆரியச் சக்கரவர்த்தி என்ற பெயருக்கு விளக்கம் சொல்ல வந்த சி. பத்மநாதன் பாண்டிய அரசர்கள் தங்களது அதிகாரி களுக்கு படைத்தளபதிகளுக்கு சக்கரவர்த்தி பட்டம் வழங்கி னார்கள் என்று சாசன சான்றுடன் நிறுவுகின்றார். பாண்டியர் வரலாறும் அதனை உண்மை என ஒப்புக் கொள்கின்றது. (பாண்டியர் வரலாறு - இராசசேகர தங்கமணி)

ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து அரசாண் டமையால் சிங்கை ஆரியன் என்று அழைக்கப்பட்டனர். இதற்கு கோட்டேகம கல்வெட்டும் ஆதாரம் அளிக்கின்றது.

கங்கைநாடன்-காங்கேயன்

இந்தியாவில் அரசகுலங்கள் பல தாங்கள் கங்கை குலத்தினர் - கங்கை நாடர் என்ற ஐதீகத்தை உருவாக்கி இருந்தனர்.

யாழ்ப்பாண அரசர்களும் கங்கைநாடன், காங்கேயன் என்ற ஐதீகங்களை தங்களை மேன்நிலைப்படுத்த உருவாக்கி இருக்கலாம் என்கின்றார் சி. பத்மநாதன். யாழ்ப்பாண அரசர்கள் சோழகங்கர்களுடன் திருமணம் செய்ததன்மூலம் இப்பட்டத்தை பயன்படுத்தி இருக்கலாம் என அவர் ஊகிக்கின்றார்.

ஆனால் இதே கங்கைநாடன், காங்கேயன் என்பது பரதவர் களுக்குரிய ஐதீகம் என்பதுவும் ஏனோ கவனத்திற்கு எடுக்கப் படவில்லை.

சேதுகாவலன்

சேது என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இயற்கையாகத் தோன்றிய மணற்திட்டாகும். இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிக்கப்பட்டபோது எஞ்சிய எச்சம் அது. இது தமிழகத்து இராமேஸ்வரப் பகுதிக்கும் இலங்கை மன்னா ருக்கும் இடையில் உள்ளது. தமிழகத்தில் இப்பகுதி முக்கிய மான கடல் வழிப்பாதையில் உள்ளது. வணிகக் கப்பல்கள் இதனூடுதான் பயணம் மேற்கொள்ளும். இப்பகுதியில்தான் முக்கியமான துறைமுகங்களும் உள்ளன. இந்தப் பகுதியின் காவலர்களாக அதிகாரிகளாக ஆரியச் சக்கரவர்த்திகள் இருந்தார்கள்.

கொடி-நந்தி

இடபக் கொடியை ஆரியச் சக்கரவர்த்திகள் கொண்டி ருந்தார்கள் என்பது உண்மையே. எனினும் அவர்களுக்கு முன்பே ஈழத்தில் நந்தி கொடி அறிமுகமாகி விட்டது. கலிங்கமகானது சின்னம் நந்தியே என்கின்றார் கா. இந்திரபாலா. அதற்கு பதவியா முத்திரையை சான்றாக காட்டுகின்றார். சோழர்களும் பாண்டியர்களும்கூட நந்தியை பயன்படுத்தி இருந்தாலும் பல்லவர்கள் கொடியாகவே நந்தி அறியப்பட்டது. எனவே நந்திக் கொடி ஆரியச் சக்கரவர்த்திகளால் யாழ்ப்பாண அரச முன்னோடி களிடம் இருந்து பெற்றுக் கொண்டதே.

சேது - மங்கலவார்த்தை

ஆரியச் சக்கரவர்த்திகள் ஈழம் வந்த பின்பும் தங்கள் பூர்வீக இடத்தை மறக்கவில்லை. சேதுவை தங்கள் மங்கல வார்த் தையாக பயன்படுத்தினர்.

குலதெய்வம்:

குலதெய்வங்கள் வழியாக, குலங்களையும் சமூகங் களையும் அறிய முடியும். எங்கு சென்றாலும் குலங்கள் தங்கள் குலதெய்வங்களை மறப்பதில்லை. மேல்நிலை ஆக்கத்துக் குட்பட்டு பெருந்தெய்வ, மேனிலையாக தெய்வங்களை வணங்கி னாலும் குலதெய்வத்திற்கு கோயில் எழுப்பி வழிபடவே செய் வார்கள்.

ஆரியச் சக்கரவர்த்திகளின் குலதெய்வம் எது? ஆரியச் சக்கரவர்த்திகள் எழுப்பிய கோயில்கள் எவை? இன்றைய ஆய்வுகளின்படி சட்டநாதர் ஆலயம் சோழர் காலத்திற்குரியது. நல்லூர் கந்தசாமி கோயில் ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டது. கைலாயமாலை குறிப்பின்படி கைலைநாதர் ஆலயம் சிங்கை ஆரியன் கட்டியது என்று சொல்லப்படுகின்றது. வீர மாகாளியம்மன் ஆலயம் ஆரியச் சக்கரவர்த்திகளால் கட்டப் பட்டது. அவர்களது குடும்ப வழக்காறுகளின்படி அவர்களது குலதெய்வம் வீரமாகாளியம்மன் ஆகும்.

இவ்வீரமாகாளியம்மன் பற்றிய தேடல் ஆரியச் சக்கர வர்த்திகள் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
ஈழத்தில் கிடைத்த வணிக கணத்தின் சாசனம் ஒன்று வீர மாகாளம் என்பதைத் தெளிவாக்குகின்றது. வணிக கணத்தின் சாசனத்தை ஆராய்ந்த சி. பத்மநாதன் வீரமாகாளம் என்பது வீரக்கொடி என்ற வணிக கணத்தின் படையணி என நிறுவு கின்றார். (இலங்கையில் இந்து சமயம்)

வீரமாகாளம் என்ற படையணியினர் வணிக கணங்களின் சார்பாக கோயில்களை, பிரதேசங்களை, வணிக நகரங்களை காப்பவர்கள் என சாசனம் விளக்கமளிக்கின்றது. இந்த வீரமா காளர் வணங்கிய போர்த்தெய்வமே வீரமாகாளியாகும். எப்படி செட்டிமார் வணங்கிய முருகன் செட்டி எனப் பெயர் பெற்றானோ அதுபோள் வீரமாகாளர் வணங்கிய போர்த்தெய்வம் வீரமா காளியானாள்.

இந்த வீரமாகாளப்படை அணியினர் எங்கிருந்து எப்போது தோன்றினார்கள் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்து கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. வரலாற்று காலத்துக்கு முன்பே சர்வதேச கடல் வாணிபத்தின் முக்கிய புள்ளியாகத் தமிழகம் இருந்தது. சங்க இலக்கியங்களில் வணிக கணங்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. எனினும் கி.பி. 7ம் நுhற்றாண்டுக்குப் பின்பே தென்னிந்தியா தழுவிய வகையில் வணிக கணங்கள் பெருமளவு தோன்றின. அந்த வணிக கணங்களில் ஒன்றே வீரக்கொடி வணிக கணம்.

தமிழகத்து வணிகர்கள் நெய்தல் சமூகங்களிலிருந்தே தோன்றினார்கள். நெய்தல் நிலத்து பரதவர்கள் பெருவணிகராக உருவானதை சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரமும் பதிவு செய்துள்ளது.

இதேபோல் சோழநாட்டு துறைமுகப்பட்டினங்களில் இருந்து உருவான வீரக்கொடி எனும் வணிக கணத்து போர்வீரர்கள் பரதவர் (பட்டினவர்) சமூகங்களில் இருந்தே தோன்றினார்கள். இந்த சோழநாட்டு பட்டினவர் ஆரியன் என்ற ஐதீகத்தைக் கொண்டிருந்தார்கள். இப்படி உருவான வீரமாகாளம் என்னும் வீரக்கொடி வணிக கணத்தின் படைத் தலைவனாக ஆரியச் சக்கரவர்த்திகள் குடும்பம் இருந்திருக்க வேண்டும்.

ஆரியச் சக்கரவரத்தி குடும்பம் எப்படி இராமேஸ்வர கரைக்கு வந்தது என்ற கேள்வி எழுவது இயல்பு.

1. வணிக கணத்தின் படையணியாக வந்திருக்கலாம்
2. சோழப் பேரரச படைகளுடன் சோழப் படையெடுப்பின் போது வந்திருக்கலாம்.
சோழ அரசர்கள் வணிக படையணிகளை தங்கள் படையெ டுப்புகளுக்கு பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் உண்டு.
சோழர்கள் பாண்டி நாட்டை ஆட்சி செய்தபோது பிரதேசத் தலைவர்களாக, வன்னியத் தலைவர்களாக, முதலிகளாக, வனநாட்டு தலைவர்களாக தங்கள் படைத் தளபதிகளை நியமித்துள்ளார்கள். அவ்வேளை ஆரியச் சக்கரவர்த்தி களுக்கும் சேதுகாவலன் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் வணிக மையமாக விளங்கிய இராமேஸ்வரம் பகுதி ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரையினரின் தலைமையிலான வணிக படையணியால் நிர்வகிக்க உரிமை பெற்றிருக்க வேண்டும்.

பின்பு பாண்டியர்கள் தம் நாட்டை மீட்டு ஆட்சி அமைத்த போது ஆரியச் சக்கரவர்த்திகள், பாண்டிய படைத் தளபதிகளாக சமாந்தர்களாக, அமைச்சர்களாக மாறினார்கள். பாண்டியர் ஆட்சியில் சோழ நிர்வாகிகள் பாண்டியர்களுடன் இணைந்து பணியாற்றியதற்கு ஆதாரங்கள் உண்டு. இப்படிப் படைத் தளபதியாகிய ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரையை சேர்ந்தவனே 1284இல் பாண்டியர் சார்பில் ஈழத்துக்குப் படை எடுத்து வந்தவன். இதற்கு சாசன சான்றுகள் உண்டு.

இலங்கையின் வடபகுதியை நேரடியாகவே பாண்டியர் ஆண்டபோது பாண்டியர் சார்பில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரியச் சக்கரவர்த்தி. பாண்டியர் வலிகுன்றிய போது, சுதந்திர அரசனாக மாறினான். இது கி.பி. 1310இல் நடந்தது.
யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் குல விருதுகள் வழிபாடுகள் மூலம் தங்கள் பூர்வீகத்தை வெளிக்காட்டியபடியே ஆட்சி செய்ததாகத் தெரிகின்றது. இதற்கு ஆதாரங்களாக

1. கண்ணகி வழக்குரை காவியத்தை பாடியது அல்லது பாடக் காரணமாக இருந்தது.
2. ஆரியன் காங்கேயன், கங்கைநாடன் என்ற பொதுப் பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
3. கந்தபுராணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் ஆதரிக்கப் பல காரணங்களே இருந்தாலும் அவற்றில் ஒன்றாக அதில் இடம்பெறும் மாகாளர் வரு படலமும் ஒரு காரணமாக இருக் கலாம். மாகாளர் வரு படலம் வீரமாகாளர் படையணியின் வீரத்தைச் சொல்லும் பகுதியாகும். கந்தபுராண ஆசிரியர், தான் பார்த்த கேட்ட யதார்த்தத்தில் இருந்த படையணியை தேவ லோக படையணியாக மாற்றிவிட்டார்.

இறுதியாக, யாழ்ப்பாண அரசர்களை மேல்நிலையாக் கத்துக்கு உள்ளாக்க நினைத்த வருண சிந்தனைப் புலமை யாளர்களே அவர்களைப் பிராமணர்கள் ஆக்கினார்களா என்ற கேள்வி எழுவது இங்கு தவிர்க்க முடியாதது.
 

குறிப்புகள்:

1. இன்றும் தமிழக கடற்கரைப் பட்டினவர் வீரமாகாளி யம்மனை வழிபடுகின்றார்கள். உம்: பாகூர், அரியாம் குப்பம் வீரமாகாளியம்மன் கோயில்கள்
2. வட்டுக்கோட்டையில் யாழ்ப்பாண அரச பரம்பரையினரின் ஒரு கிளையினர் குடியேறியபோது முதன்முதலாக வீரமாகாளி யம்மன் கோயிலைக் கட்டினார்கள். அதுவே தங்கள் குல தெய்வம் என்று கூறுகின்றார்கள்.
3. போர்த்துக்கேயர் காலத்தின் கடைசிப்பகுதியில் வட்டுக் கோட்டையில் குடியேறிய சோழநாட்டு பட்டினவர் பரம்பரையில் வந்த மாதாஜி வம்சத்தவர்கள் தங்கள் பெயர்களின் பின்னால் ஆரியன் என்ற பெயரை இட்டுக் கொள்கின்றார்கள்

கண்ணகி வழக்குரைப் பாடல்கள்

திரு விருக்கும் மணிமார்பன் சிறந்த தமிழ் ஆரியர் கோன்
மரு விருக்கும் மார்பணிந்த மண்டத்தில் வணிகர் மைந்தன்
தரு விருக்கும் கைதலத்தான் தந்திவண்ண பெருமாள் காண்
குரு குலத்தோர் கொண்டாட இக் கதையைப் பாடி வைத்தான்
(அடைக்கலங்காதை செய் 3)
-------------------------------------------------------------


உசாத்துணை நுhல்கள்

  1. கைலாய மாலை
  2. யாழ்ப்பாண வைபவ மாலை
  3. வையா பாடல்
  4. செகராச சேகர மாலை
  5. இலங்கையில் இந்துசமயம் - பேராசிரியர் சி.பத்மநாதன்
  6. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேராசிரியர் சி.பத்மநாதன்
  7. ஆய்வு வட்டக் கட்டுரைகள் - தொகுப்பு : கிருஸ்ணமூர்த்தி
  8. யாழ்ப்பாண இராச்சியம் - தொகுப்பு : சி.க.சிற்றம்பலம்
  9. பாண்டியர் வரலாறு - இராசசேகர தங்கமணி
 10. மகோன் வரலாறு - தங்கேஸ்வரி
 11. யாழ்ப்பாண சரித்திரம் - ஆ. முத்துதம்பிப்பிள்ளை
 12. யாழ்ப்பாண சரித்திரம் - இராஜநாயக முதலியார்
 13. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - சுவாமி ஞானப்பிரகாசர்
 14. கண்ணகி வழக்குரை - காங்கேயன் (பதிப்பு: வீ.சி.கந்தையா)
 15. சங்க இலக்கியம்
 16. சிலப்பதிகாரம்

இக்கட்டுரை உயிர்நிழல் JULY - DECEMBER 2008 இதழில் வெளியானது

2கருத்துக்கள்
Related Post
Pollachi Nasan [ 27-06-2009 ]

Dear Friend
your article is valuable
we have to expose this to our tamil community
yours nasan

Puli [ 23-01-2010 ]

Valuable article

Post your Comments
English   பாமினி உச்சரிப்பு
Name :
Email :
Comment :
எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்